டிசம்பர் 31, 2016

புத்தாண்டுச் செய்தி - 2017 "அதிசயங்களைக் காணப் பண்ணுவேன்"

Image result for micah: 7:14

“உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்”  

திறவுகோல்வசனம்: மீகா: 7:15 - “உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்”.

இப்புத்தாண்டில் தேவனாகிய கர்த்தர் நமக்குத் தந்துள்ள வாக்குத்தத்தம் இதுதான்.
நடப்பதற்க்கு  அரிதான காரியங்களைத் தான் நாம் அதிசயம் என்கிறோம். நம் வாழ்வில் நினையாத நாழிகையில் எதிர்பாராமல் நடக்கும் நன்மையான ஈவுகளைத்தான் நாம் அதிசயங்கள் என்கிறோம்.

உங்கள் வாழ்விலும், உங்கள் குடும்பத்திலும், உங்கள் தொழில் வியாபாரத்திலும், உங்கள் பொருளாதாரத்திலும், உங்கள் ஊழியத்திலும் நாம் ஆராதிக்கும் தேவனாகிய கர்த்தர் அதிசயங்களைக் காணச் செய்யப் போகிறார். உங்கள் வாழ்நாளில் எதெல்லாம் நடக்கவே சாத்தியமில்லையென கருதினீர்களோ… அவைகளிளெல்லாம் நீங்கள் இனிமேல் தேவனுடைய அற்புதங்களைக் காணப் போகிறீர்கள். முடியவே முடியாது, நடக்கவே நடக்காது என்ற சொற்கள் இனி உங்கள் விசுவாச வாழ்வில் உச்சரிக்க விடவேமாட்டார். இவ்வாண்டு முழுவதும் உங்களை அதிசயங்களைக் காணப்பண்ணுவாராக! ஆமென்! அல்லேலூயா!

மீகா: 7:14 – “கர்மேலின் நடுவிலே தனித்து வனவாசமாயிருக்கிற உமது சுதந்தரமான மந்தையாகிய உம்முடைய ஜனத்தை உமது கோலினால் மேய்த்தருளும்; பூர்வநாட்களில் மேய்ந்ததுபோலவே அவர்கள் பாசானிலும் கீலேயாத்திலும் மேய்வார்களாக”

ஒவ்வொருநாளும் நம் வாழ்வில் அற்புதங்களைக் காண, ருசிக்க என்ன செய்ய வேண்டும்? தேவன் யாருக்கெல்லாம் அற்புதங்களைச் செய்வார்? அற்புதங்களைப் பெற நிபந்தனைகள் என்ன? என்பதையெல்லாம் இப்பகுதியில் தியானிக்கப் போகிறோம். வாருங்கள்.

1.   கர்மேலின் நடுவிலே வாசமாயிருக்கிறவர்களுக்கு கர்த்தர் அதிசயங்களைக் காணப்பண்ணுவார்: மீகா: 7:14

கர்மேல்” என்பதற்கு “கனி தரும் தோட்டம்” என்பது அர்த்தமாம். கர்த்தரின் தோட்டம் – கனி தரும் தோட்டம். அதுவே நம் “நேசரின் தோட்டம்”.

இத்தோட்டத்தில் உன்னதப்பாட்டு : 4:13-16 – “உன் தோட்டம் மாதளஞ்செடிகளும், அருமையான கனிமரங்களும், மருதோன்றிச் செடிகளும், நளதச் செடிகளும், நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும், சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப்போளச் செடிகளும், சந்த விருட்சங்களும், சகலவித கந்தவர்க்கச் செடிகளுமுள்ள சிங்கார வனமாயிருக்கிறது. தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவத்தண்ணீரின் துரவும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது. வாடையே! எழும்பு; தென்றலே! வா; கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு; என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக”

கர்த்தருக்கு வாசனைவீசும் நற்கந்தமாய் விளங்குகிற சகலவித தேவஜனங்கள் நிறைந்திருப்பார்கள்; சகல சத்தியத்திலும் நடத்திச் செல்ல ஜீவத்தண்ணீராகிய பரிசுத்தாவியானவரின் நடத்துதல் நீரூற்றாக, துரவாக, வாய்க்கால்களாக உண்டாயிருக்கிறது; வாசனை வீசும் உன் சாட்சியின் வாழ்வு வேதவசனத்தோடு இசைந்து வாடையாக எழும்பி, தென்றலாக மாறி, கர்த்தரின் கனிதரும் நேசரின் தோட்டமாகிய தேவனுடைய சபையில் நற்கந்தமாக வீசுவாயானால்… என் நேசர் தம்முடைய நேசரின் தோட்டத்துக்கு வந்து, தோட்டத்தில் விளைந்த தமது அருமையான கனிகளை புசிப்பார்.

கனிதரும் தோட்டமாகிய கர்மேலுக்கு அடிக்கடி வந்து சென்ற தீர்க்கதரிசிகள் இரண்டுபேர். 1. எலியா 2. எலிசா. கனிகள் நிறைந்த தோட்டத்திற்குள் வானரங்களும், பறவைகளும் ஈர்க்கப்படுவது இயற்கைதானே! கர்மேல் கனிதரும் தோட்டம் மட்டுமல்ல. குளிர்ச்சியான குகைகள் நிறைந்தது. கர்மேல் என்பது ஒரு மலைத் தொடராகும். செழிப்பான தோட்டங்கள் நிறைந்த ஒரு மலைத்தொடர். அக்குகைகள் தேவனோடு தனித்து ஜெபிப்பதற்கு இவர்களிருவருக்கும் பயன்பட்டிருக்கலாம்.

கர்மேல் – கர்த்தரை விட்டுவிலகி விக்கிரகாராதனை செய்த பாவிகளின் நடுவே தன்னை மெய்த்தெய்வமாக நிரூபணம் செய்த இடம் கர்மேல். பக்தி வைராக்கியமுள்ளவர்களின் சொர்க்கபூமி கர்மேல். கர்த்தரோடு உறவாடுகிற இடம் கர்மேல். அடுத்தடுத்து பக்தி வைராக்கியமுள்ள ஆவிக்குரிய தலைவர்கள் எழும்பிய இடம் கர்மேல். தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் வாசம்பண்ணுமிடம் கர்மேல். கர்த்தருக்குள் தங்களை நிலைநிறுத்திக் கொள்கிற, கற்றுக் கொள்கிற, சீஷத்துவத்தைப் பெறுகிற இடம் கர்மேல் என்னும் கனிதரும் தோட்டம். அது கர்த்தரின் தோட்டம். அதுவே நமது நேசரின் தோட்டம்.

வேதத்தின் மகத்துவங்களை அறிய விரும்புகிறவர்களும், சீஷத்துவத்தில் வளர விரும்புகிறவர்களும், கர்த்தருக்கு நற்கனிகளை தர வாஞ்சிக்கிறவர்களும், வாசனை வீசுகிற சாட்சி நிறைந்த வாழ்வுவாழ விரும்புகிறவர்களும் இத்தோட்டத்தின் நடுவிலே வந்து வாசம் பண்ண விரும்புவார்கள். சபையாகிய இத்தோட்டத்தில் இணைகிறவர்கள், தேவனாகிய கர்த்தரின் தோட்டத்தின் நடுவிலே வாசம் பண்ண வாஞ்சிக்கிறவர்களுக்கே தேவனாகிய கர்த்தர் தினம் தினம் அற்புதங்களைச் செய்ய வல்லவராயிருக்கிறார்.

சபையோடு இணையாதவர்கள் இணைந்திராதவர்களுக்கு அற்புதஅதிசயங்கள் இல்லை. ஒருவேளை புதியவர்கள் இரட்சிக்கப்படும்படி அவ்வப்போது அற்புதங்கள் நடக்கலாம். அற்புத அதிசயங்களைப் பெற்றும் தேவனோடும் சபையோடும் இணைந்திராதவர்களுக்கு அதிசயங்கள் தாமதமாகலாம். அனுதினமும் அற்புதங்களைக் கண்டிட தேவசபையில் தேவனோடு ஐக்கியப்படுவது மிக அவசியம். ஏனெனில், “இரட்சிக்கப்படுகிறவர்களை கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக் கொண்டு வந்தார்” (அப்போஸ்தலர்: 2:47).

நாம் சபையில்தான் வாசம் பண்ண வேண்டும்; அது எந்தளவிற்கு முக்கியமானது என்பதை நாம் உணர்ந்திட தேவனாகிய கர்த்தரே இரட்சிக்கப்படுகிற ஒவ்வொருவரையும் சபைக்குள் கொண்டு வந்து சேர்க்கிறதை நாம் வாசிக்கிறோம். நாம் சபைக்குள் வந்தால் மாத்திரம் போதுமானதல்ல; நாம் சபை நடுவே, சபைக்குள்தான் வாசம் பண்ண வேண்டுமென்று ஆவியானவர் விரும்புகிறார். பிரிந்து போகிறவன் தன் இச்சையின்படிதான் பிரிந்து போகிறானே தவிர … ஆவியானவரின் சித்தப்படியல்ல. ஆவியானவரின் சித்தம் சபையில் ஐக்கியமாய் இருப்பதுதான்.

ஆதிசபையார் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும் அந்நியோந்நியத்திலும் அப்பம் பிட்குதலிலும் ஜெபம் பண்ணுவதிலும் உறுதியாய் தரித்திருந்தனர் (அப்போஸ்தலர்: 2:42). கிட்டத்தட்ட இரட்சிக்கப்பட்டவர்கள் சபையோடு பிணைக்கப்பட்டிருந்தனர் எனச் சொல்லலாம். ஆதிதிருச்சபையார் வாரத்திற்கொரு சபை, மாதத்திற்கொரு கூட்டம் என்று அங்குமிங்கும் அலைந்து திரியவில்லை. சபைகூடிவருதலை அவர்கள் விட்டுவிடவில்லை. உபத்திரவ காலங்களிலும் அவர்கள் ஆராதனை தடைபடவில்லை. ஆங்காங்கே இஸ்ரவேலிலே இருக்கின்ற மலைக்குகைகளில் பக்தி வைராக்கியத்தோடு ஆராதனையில் பங்கு பெற்றனர். எனவேதான், ஆதித்திருச்சபை அற்புத அதிசயங்களை அனுதினமும் கண்டது.
சபைகூடுதலை முக்கியமாய் எண்ணி, சபையில் நடைபெறும் கூட்டங்களில் உண்மையாய் பங்குபெற்று, சபையின் ஊழியங்களோடும் ஊழியரோடும் இசைந்து ஊழியம் செய்து, கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்கு உண்மையாயிருப்போமானால், தேவன் நம் வாழ்க்கையில் நிச்சயம் அதிசயங்களைக் காணப்பண்ணுவார். ஆமென்! அல்லேலூயா!

2.   தேவனுடைய உரிமைச் சொத்தாய் இருப்பவர்களுக்கு கர்த்தர் அதிசயங்களைக் காணப்பண்ணுவார்: மீகா: 7:14

மீகா: 7:14 – “…தனித்து வனவாசமாயிருக்கிற…”

உபாகமம்: 33:28 – “இஸ்ரவேல் சுகமாய்த் தனித்து வாசம் பண்ணுவான்…”

அப்போஸ்தலர்: 2:40 – “… மாறுபாடுள்ள இந்த சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக் கொள்ளுங்கள் …”

லேவியராகமம்: 20:26 – “கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தேன்”.

எண்ணாகமம்: 23:9 – “… அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள்…”

ஜாதிகளோடே கலவாமல், பாவம் நிறைந்த உலகத்தில் விக்கிரகாராதனை உள்ள வசிப்பிடங்களில் நாம் அதனோடே கலவாமல், தனித்து பரிசுத்தமாய் காத்துக் கொண்டு வாழவும், அவருக்கு மட்டுமே உரிமைச் சொத்தாகவும் நம்மை அர்ப்பணித்து ஒரு பிரதிஷ்டை பண்ணப்பட்ட வாழ்வு வாழ தேவனால் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

தேவன் தம்முடையவர்களை மிகவும் நேசிக்கிறார்; தம்முடையவர்களை தம்முடையவர்களாகவே இருக்கவே எதிர்பார்க்கிறார். பெருவெள்ளமாக பெருக்கெடுத்து வளர்ந்து வரும் மேற்கத்திய நவீன கலாச்சாரத்திலோ, இந்தியக் கலாச்சாரத்திலோ அலசடிப்பட்டு அடித்துச் சென்று விடாதபடி வேதாகமக் கலாச்சாரத்தில் நிலைநிற்க வேண்டும். “எக்ளீசியா” என்ற கிரேக்க வார்த்தைக்கு “வெளியே அழைக்கப்பட்டவர்கள்” என்று அர்த்தமாம். 

பாவத்தை விட்டு பரிசுத்தமாய் வாழும்படி உலகத்தை விட்டு வெளியே அழைக்கப்பட்டவர்களின் கூட்டத்திற்கு எக்ளீசியா என்று பெயர். எக்ளீசியா என்ற சொல்லைத்தான் சபைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. பாவம் நிறைந்த உலகத்தில் பரிசுத்தமாய் வாழ அழைக்கப்பட்டவர்கள் நாம். நாம் அனைவரும் கிறிஸ்து என்னும் மணவாளனுக்கு நியமிக்கப்பட்ட வேறுபிரிக்கப்பட்ட கன்னிகைகள் என்பதை மறந்து விடக்கூடாது.

இந்நாட்களில் விசுவாச துரோகம் எங்கும் தலைவிரித்து ஆடும் நிலை உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் நாம் தேவனுக்கு உண்மையாயிருக்க வேண்டியது மிக அவசியமாகும்.

இஸ்ரவேல் தேசம் பாவத்திலே மூழ்கி விக்கிரகாராதனைக்குள் சென்றபோது கர்த்தருக்காக வைராக்கியமாயிருந்த தேவனுடைய மனிதனாகிய எலியாவின் நாட்களில் தேவன் செய்த அதிசயமான காரியங்களைப் பாருங்கள். தேவனாகிய கர்த்தரையன்றி வேறெந்த தெய்வங்களுக்கும் கையெடுக்காமலும், முழங்கால்களை முடக்காமலும், பணத்திற்காகவும், உலக இச்சைகளுக்காகவும் கர்த்தரை விட்டுப் பின் வாங்காமலும் தீர்க்கதரிசி எலியாவைப் போல தேவனாகிய கர்த்தருக்கு வைராக்கியமாய் இருப்போமானால், அவருடைய உரிமைச் சொந்தாய் மாத்திரம் இருப்போமானால் நிச்சயம் உங்கள் ஒவ்வொருவருடைய வாழ்விலும் தேவன் அதிசயங்களைக் காணப் பண்ணுவார்.

3.   தேவனுடைய மேய்ச்சலை மேய்கிற ஜனங்களுக்கு கர்த்தர் அதிசயங்களைக் காணப் பண்ணுவார்: மீகா: 7:14

1நாளாகமம்: 4:41 – “… தங்கள் ஆடுகளுக்கு மேய்ச்சல் இருந்தபடியினால், அவர்கள் அந்த ஸ்தலத்திலே குடியேறினார்கள்”. மேய்ச்சல் இல்லாத இடங்களில் ஜனங்களும் இருக்க மாட்டார்கள்; ஆடுகளும் இருக்காது. எனவே, சபை மேய்ப்பர்கள் ஆடுகளுக்கு தேவையான ஆகாரங்களை ஆயத்தமாக்கி வைத்திருக்க வேண்டும்.

ஏசாயா: 7:18,19 – “அந்நாட்களிலே, கர்த்தர் எகிப்து நதிகளின் கடையாந்தரத்திலுள்ள ஈயையும், அசீரியா தேசத்திலிருக்கும் தேனீயையும் பயில்காட்டி அழைப்பார். அவைகள் வந்து ஏகமாய் வனாந்தரங்களின் பள்ளத்தாக்குகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும், எல்லா முட்காடுகளிலும், மேய்ச்சலுள்ள எல்லா இடங்களிலும் தங்கும்”.

மேய்ச்சல் இருக்கிற இடந்தேடி வரும்படி தேவனாகிய கர்த்தர் ஈயையும், தேனீயையும் கூட விசிலடித்து கூப்பிட்டு விடுவாராம். பயில் காட்டி – என்றால் விசிலடிப்பது என்று பொருள். எனவே, நம் சபைகளில் நல்ல ஆரோக்கியமான தரமான தேவனுடைய உபதேசம் நிறைந்த சபையாக, வேதவிளக்கங்களை வியாக்கியானப்படுத்தி கொடுக்கிற சபையாக எப்பொழுதும் ஆயத்தமாக வைத்திருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தை இருக்கும் இடத்திற்கு தேவனே ஆத்துமாக்களை விசிலடித்து அழைத்து சபையில் சேர்த்து விடுவார்.

எசேக்கியேல்: 34:14 – “அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்திலே படுத்துக் கொள்ளும், இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும்”.

நல்ல மேய்ச்சலைக் கொடுக்கும் மேய்ப்பனுக்குக்கீழ் மேய்ப்பார். அது நல்ல தொழுவமாயிருந்தால் அங்கேயே படுத்துக் கொள்ளும். அங்கேயே நிரந்தரமாய் தங்கி தாபரித்து மேய்ச்சலை தருகின்ற மேய்ப்பனுக்கு கீழாக ஆவிக்குரிய மேய்ச்சலை மேயும். தொழுவத்திற்கு தொழுவம் மாறாமலிருக்கும். மேய்ச்சலுக்கு மட்டுமல்ல, நல்ல விசாரிப்பும், அன்பும், உபசரிப்பும், அரவணைப்பும் உள்ள இடங்களில் ஆடுகள் படுத்துக்கொள்ளும்.

யோவான்: 6:67-69 – “அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்திரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்.

ஒரு ஆத்துமாவை நித்திய ஜீவ வசனங்களுக்குள் கொண்டு வந்து இயேசுவே கிறிஸ்து என்று விசுவாசிக்கவும், அறியவும் செய்து விட்டால் போதும் … அந்த ஆடுகள் தொழுவத்தை விட்டு நீங்காமல் படுத்திருக்கும். ஒரு மேய்ப்பனின் வேலை இதுதான் – யோவான்: 10:9 – “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்”. ஒரு ஆத்துமாவின் தாகம் இயேசுகிறிஸ்துவால்தான் தீர்க்கப்பட முடியும். எனவே, எந்தவொரு ஆத்துமாவையும் கிறிஸ்துவுக்குள் சென்று மேய்ச்சலைக் காணச் செய்து விட்டால் போதும், உள்ளும் புறம்பும் ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கும்போது மேய்ச்சலையும், தொழுவத்தையும் விட்டு நீங்காது. இவ்விதம் செய்வோமானால் …. அப்பொழுது ஊழியத்தில் தேவனாகிய கர்த்தர் அதிசயங்களைக் காணப்பண்ணுவார்.

சங்கீதம்: 95:7 – “அவர் நம்முடைய தேவன்; அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே”.

கர்த்தர் நம்மை மேய்க்கிறவர். புல்லுள்ள இடங்களில் மேய்க்கிறவர். தேவனுடைய சத்தியமே நமது மேய்ச்சலாகும். எனவே, நாம் தேவனுடைய சத்திய வசனத்தை வாசிக்க வேண்டும்.

ஆடுகள் மேய்ந்தபின் தனியே அமர்ந்து அசைபோடும். அதுபோல நாம் வாசித்த சத்திய வசனங்களை தியானம் செய்ய வேண்டும்.

சங்கீதம்: 1:2,3 – “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிரா மரத்தைப் போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்”.
நாம் வேதத்தை வாசித்து தியானிக்கும்போது நமக்குள் நடப்பதென்ன? நமக்குள் தேவனுடைய வார்த்தையானது, தேவன் மேலுள்ள விசுவாசத்தை அளவில்லாமல் பெருகச் செய்யும். அப்படிப் பெருகும் விசுவாசம் நமது வாழ்க்கையில் அதிசயங்களைக் காணச் செய்யும்.

எனவே, எனக்கன்பானவர்களே!

கர்த்தருடைய சரீரமாகிய சபையில் ஐக்கியமாயிருங்கள். சபையில் கொடுக்கப்படும் நல்ல கொழுமையான ஆகாரங்களினால் செழுமை பெறுங்கள். ஆத்துமாவில் பலப்படுங்கள். உபதேசங்களில் ஊன்றக் கட்டப்படுங்கள். நல்ல மேய்ச்சலே நம்மை பலப்படுத்தும். ஆகவே, தேவனுடைய வசனத்தை இரவும் பகலும் வாசித்து தியானியுங்கள். அப்பொழுது உங்கள் வாழ்வில் தேவனாகிய கர்த்தர் அதிசயங்களைக் காணப்பண்ணுவார். ஆமென்! அல்லேலூயா!

தேவனுடைய சபையாகிய நேசரின் தோட்டத்தின் நடுவே வாசம் பண்ணுகிறவர்களுக்கும், தங்களை தேவனுக்கு உரிமைச் சொத்தாக கொண்டவர்களுக்கும், கர்த்தருடைய மேய்ச்சலை மேய்கிறவர்களுக்கும் இப்புத்தாண்டின் நாளில் மட்டுமல்ல … ஆண்டு முழுவதும் அதிசயங்களை காணப்பண்ணுவாராக! ஆமென்! அல்லேலூயா!

உங்கள் அனைவருக்கும், நேசரின் தோட்டம் ஏஜி சபையின் சார்பாக புது வருட வாழ்த்துக்களை மனதார தெரிவித்துக் கொள்கிறேன்.

“கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்” (எண்ணாகமம்: 6:24-26)



டிசம்பர் 30, 2016

வளர்ச்சியை நோக்கி …

Image result for வளர்ச்சியை நோக்கி

திறவுகோல் வசனம்:       எபேசியர்: 4:15 – “தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக …” என்று வேதத்தில் வாசிக்கிறோம். 

புத்தாண்டை எதிர் நோக்கியுள்ள நாம் ... கிறிஸ்து இயேசுவுக்குள் நல்லதொரு வளர்ச்சியை எட்டிவிட ஆயத்தப்படுவோம்.

மத்தேயு: 13:7 – “சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப் போட்டது”.

மத்தேயு: 13:26 – “பயிரானது வளர்ந்து கதிர் விட்டபோது, களைகளும் காணப்பட்டது”.

விதை – எப்பொழுதும் ஜீவனுள்ளது. விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை என்று ஒரு சொலவடை உண்டு. மண்ணில் கிடக்கும் விதையானது மழைநீர் பட்டவுடன் முளைவிட ஆரம்பித்து விடும். அதாவது, வளர ஆரம்பித்து … வளர்ச்சியை நோக்கி பயணப்பட்டு விடும். வளர்ச்சிக்குத் தேவையான காரியங்கள் அதற்கு தேவைபடும். வளர்ச்சிக்குத் தேவையானவை விதை விதைக்கப்பட்ட இடத்திலேயே அதற்கு கிடைக்க வேண்டும். அவ்விதைக்கு அந்நிலமே தேவையானதை தரும். அல்லது விதைத்தவன் அதற்கானதை தர முன்வருவான். இல்லாவிடின் அவ்விதையின் வளர்ச்சி தடைபட்டு விடும்.

விதை – விழுந்த இடங்கள்: 1. வழியருகே   2. கற்பாறை   3. முள்   4. நல்ல நிலம்
விதைக்கு நேரிட்ட பாதிப்பு: 1. பறவைகள் பட்சித்தது 2. வேரின்றி காய்ந்தது 3. முள் நெருக்கி போட்டது 4. பலன் தந்தது
1.   ஆரம்பமே முடிவானது 2. வேரின்றி உலர்ந்தது 2. பாதிவரை வந்தும் நெருக்கத்தினால் பலனில்லை 4. நல்லபலன்

1.   வேரற்றவன்:

மத்தேயு: 13:6 – “… வேரில்லாமையால் …”  - ஒரு விதை வளர முதலில் தேவை வேர். வேர் இருந்தால்தான் தனக்குத் தேவையான ஆகாரத்தை, நீரை உறிஞ்செடுத்து வளர்ச்சியை நோக்கி செல்லும். வேர் இல்லாவிடின் நிலத்தில் எவ்வளவுதான் செழுமையான ஆகாரம் (நிலத்தில் – சபையில்) இருந்தாலும் எடுத்துக்கொள்ள இயலாதே… வளர்ச்சி எவ்விதம் இருக்க முடியும்?

2.   பலனற்றவன்:

மத்தேயு: 13:7 – முள் வளர்ந்தபடியால் விதை முளைக்காதபடி விதையை முள்ளானது மூடிக்கொண்டது. சூரிய வெளிச்சம்படாது; பனித்துளி படாது; மழைநீர் இறங்காது. தப்பித்தவறி முளைத்தாலும் முள்ளானது நெருக்குகிற நெருக்கங்களினால் அவ்விதையானது வளரமுடியாமலே குன்றிப்போய் கருகி விடுகிற அபாயம் அதற்கு அதிகமே!

3.   களைகளுடன் காணப்பட்டவன்:

மத்தேயு: 13:26 – களைகளின் நடுவே கதிர் விட்ட பயிர். மிகப் பெரிய ஆச்சர்யம்தான். தன்னைச் சுற்றிலும் ஏராளமான களைகள் காணப்பட்டாலும் கதிர் விடுவதில் தவறவில்லை. நல்லநிலத்தில் விதைக்கப்பட்டவன் பலன் தருவான். தன்னைச் சுற்றி இருக்கிற களைகளை குறித்து கவலைப்படாமல் தன் வளர்ச்சியை நோக்கி சீராகப் பயணித்து கதிர் விட்டு பலன் தருகிறவன். கதிர் தருவதுதான் தன் கடமை; களை பறிப்பது கர்த்தரின் வேலை என்பதை உணர்ந்தவனே சிறந்தவன்.

இப்படியிருக்க… பிரியமானவர்களே!

புத்தாண்டை எதிர்நோக்கியிருக்கிற நாம் சீரான வளர்ச்சியை நோக்கி கடந்து செல்வோமாக. வளர்ச்சியை நோக்கி எவ்வாறு கடந்து செல்ல வேண்டும்? எவற்றிளெல்லாம் நாம் வளர்ச்சி அடைய வேண்டும்? என்பதை குறித்து ஒரு தெளிவு நமக்கு இருப்பது அவசியம். 

கல்வியில் வளர்ச்சி, அறிவில் வளர்ச்சி, தொழிலில் வளர்ச்சி, பொருளாதாரத்தில் வளர்ச்சி, ஊழியத்தில் வளர்ச்சி, ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சி, குடும்ப வாழ்வில் வளர்ச்சி, சபை வளர்ச்சி இப்படி எல்லாவிதங்களிலும் ஒரு நல்ல வளர்ச்சி பெற நாம் வாஞ்சிப்பது நல்லது. என்றாலும் வேதத்தின் கண்ணோட்டத்தில் நமது வளர்ச்சி வசனத்தைச் சார்ந்து எவ்விதம் இருக்க வேண்டும் என தியானிப்போம் வாருங்கள்.

1.   ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சி:

அப்போஸ்தலர்: 22:3 – “நான் யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சு பட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டு, இன்றையத்தினம் நீங்களெல்லாரும் தேவனைக் குறித்து வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறதுபோல நானும் வைராக்கியமுள்ளவனாயிருந்தேன்”.

ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடைய … ஆவிக்குரிய பெற்றோர்களும், சரீரப் பிரகாரமான பெற்றோர்களும் நமக்கு அவசியம் தேவை. ஆவிக்குரிய பெற்றோர் கற்றுத் தருவதை வாழ்வில் கடைபிடித்து வாழ வழிகாட்ட சரீரப்பிரகாரமான பெற்றோர் தேவை. அப்போது வேதப்பிரமாணத்தின்படி திட்டமாய் போதிக்கப்படவும், தேவனைக்குறித்து வாழ்வில் வைராக்கியமுள்ளவர்களாக வாழவும் நம்மால் இயலும்.

வளர்ச்சியடைய தன்னடக்கம், தாழ்மை தேவை:

a)   லூக்கா: 1:80 – “அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங் கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள் வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தான்” யோவான் ஸ்நானகன் என்னும் அந்த பிள்ளை இரண்டு விஷயங்களில் வளர்ந்தது. 1. ஆவியில் 2. தாழ்மையில்.
b)   அப்.பவுல் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியை நோக்கி முன்னேறிச் செல்ல … தாழ்மையோடு … கமாலியேலின் பாதத்தருகே வளர தன்னை அர்ப்பணித்தான். அதனால்தான் முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டான் என அறிகிறோம்.
c)    எஸ்தர்: 2:20 – “… எஸ்தர் மொர்தெகாய் இடத்தில் வளரும்போது அவன் சொற்கேட்டு நடந்ததுபோல, இப்பொழுதும் அவன் சொற்கேட்டு நடந்து வந்தாள்”

2.   உலக வாழ்வில், ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சி:

மாற்கு: 4:32 – “விதைக்கப்பட்ட பின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார்”.

ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையும் தேவனால் ஒவ்வொருவிதமான நோக்கத்திற்காக விதைக்கப்படுகிறான். எல்லாரும் ஊழியத்திற்காக விதைக்கப்படுகிறதில்லை; எல்லாரும் உலகப்பிரகாரமான வேலைகளுக்காக விதைக்கப்படுகிறதில்லை. சிலரை யோசேப்பு, தானியேல், தாவீது போன்று தேசங்களை ஆளுகை செய்யவும், மோசே, ஆரோன், யோசுவா போன்று தேவஜனங்களை வழிநடத்தவும் கர்த்தர் தெரிந்து கொள்கிறார். “இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும்?” (எஸ்தர்: 4:14).

விதைக்கப்பட்ட பின்போ …

பஞ்ச காலத்தில் தேவஜனங்களை ஆதரிக்க யோசேப்பு தன் பெற்றோர்களை விட்டு பிரிந்து எகிப்துக்கு அரசனாக வேண்டியிருந்ததே!
அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து தேவஜனங்களை மீட்க, மோசே தேவனால் விதைக்கப்பட்டானே!

தேவனால் விதைக்கப்பட்ட பின்போ… விதைக்கப்பட்டவருக்கும், தேவஜனத்திற்கும் பலன் தருகிறவர்களாக பெரிய பெரிய கிளைகளை விட வேண்டாமா? ஊழியங்கள், சபைகள் பெரிய பெரிய கிளைகளாகவும், தொழில் வியாபாரங்கள் பெரிய பெரிய கிளைகளாகவும் வளர வளர்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டுமென்பது தேவனுடைய விருப்பம் என்பதை அறியுங்கள்.
நமது ஆவிக்குரிய வளர்ச்சியும், உலகப்பிரகாரமான வளர்ச்சியையும் தேவன் விரும்புகிறார். வளர்ச்சியை நோக்கி கடந்து செல்ல வேண்டும் என கர்த்தர் விரும்புகிறார்.

3.   ஒருமனம், ஒற்றுமை, ஐக்கியத்தில் வளர்ச்சி:

குடும்பமோ, சபையோ எதுவாயினும், வளர்ச்சியடைய வேண்டுமானால் … ஒருமனம், ஒற்றுமை, ஐக்கியம் மிகமிக அவசியம். ஏனெனில், மாற்கு: 3:24-26 – “ஒரு ராஜ்யம் தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலைநிற்கமாட்டாதே. ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாக பிரிந்திருந்தால், அந்த வீடு நிலை நிற்கமாட்டாதே. சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால், அவன் நிலைநிற்கமாட்டாமல், அழிந்துபோவானே” என்று நமது இரட்சகரும் மீட்பருமான ஆண்டவர் இயேசுகிறிஸ்து நமக்குச் சொல்லிச் சென்றிருக்கிறாரே!.

யோபு: 39:4 – “அவைகளின் குட்டிகள் பலத்து, வனத்திலே வளர்ந்து, அவைகளண்டைக்குத் திரும்ப வராமற்போய்விடும்”. வரையாடுகள், மான்கள் போன்ற ஊழியர்கள் நொந்து குனிந்து ஆத்துமாக்களை ஆதாயம் செய்வார்கள். ஆனால், அந்த ஆத்துமாக்களோ, சற்றேனும் சிந்தியாமல் எல்லா நிலைகளிலும் ஆசீர்வதிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டு, பலப்பட்டு, நன்கு வளர்ந்த பின்பு, சபையை விட்டு விலகி வேறு சபைகளுக்கு தாவிச் சென்று விடுவார்கள். அல்லது சபையை பிரித்து சென்று விடுவார்கள்.

பிரிந்துபோய்தான் சபையை கட்ட வேண்டும் என்பதில்லை; இருக்கின்ற சபையிலேயே இருந்து கொண்டு சபையை பலப்படுத்தி, பெரிய சபையாக, பெரிய ஊழியமாக மாற்ற பிரயாசப்படலாமே. நமது வரங்களும், தாலந்துகளும் ஸ்தல சபையிலேயே பயன்படுத்தி ஊழிய வளர்ச்சிக்கு பாடுபடலாமே! நம்மை இரட்சிப்பிற்குள் நடத்திய ஊழியர்கள், ஆவிக்குரிய வழியிலே வழிநடத்தின போதகர்களுக்கு விரோதமாக செயல்படாமல், அவர்களோடு இசைந்து ஒருமனதோடு, ஒற்றுமையாக இருந்து ஊழியத்தை கட்டும்படி உதவலாமே! அது எவ்வளவு பெரிய பாக்கியம்! தனித்துதான் ஊழியம் செய்ய வேண்டுமென்றால் … அதுதான் தேவசித்தம் என்றால் … தவறேதும் இல்லை. முறைப்படி போதகரிடம் கலந்தாலோசித்தால் … அவரும் சந்தோஷத்துடன் ஒரு புதிய ஊழியத்தை செய்திட மனப்பூர்வமாக சந்தோசமாக உதவிட முன்வருவாரே! செய்வீர்களா?!

4.   அறிவிலும் ஆலோசனை முதிர்விலும் வளர்ச்சி:

2நாளாகமம்: 10:8 – “முதியோர் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்தவர்களும் தன் சமுகத்தில் நிற்கிறவர்களுமாகிய வாலிபரோடே ஆலோசனை பண்ணி,”

அக்காலங்களிலே ராஜாக்கள் ஒரு காரியத்தை நிருணயம் செய்ய கர்த்தரிடத்தில் விசாரிப்பார்கள். தீர்க்கதரிசிகளிடத்தில் விசாரிப்பார்கள். தேவசித்தம் என்ன என்பதை அறிய ஏபோத்து மற்றும் ஊரீம் தும்மீம் என்கிற கற்களைக் கொண்டு அறிவார்கள். இது எதுவும் இல்லாவிடின், மூப்பர்களிடமாவது விசாரிக்க வேண்டும். ஆனால், சாலமோனின் குமாரனாகிய ரெகோபெயாம் இவைகளில் ஒன்றையும் நாடாமல் ஒரு புது வழியை உருவாக்குவதை பார்க்கிறோம். ஆனால், அவ்வழிகாட்டிகளோ… எதிராக நிற்கிற கூட்டத்தின் மனதை அறியாதவர்கள். தற்குறிகள். எடுத்தேன் கவிழ்த்தேன் என முடிவெடுக்கும் அவசர குடுக்கைகள். அனுபவமற்றவர்கள். வாலிபர்கள்.

எப்போதுமே எதிராக வருகிற கூட்டம் ஒரு முடிவோடுதான் வந்து நமக்கெதிரே நிற்பார்கள். கேள்வி கேட்பார்கள். நமது பதில் எதிராக நிற்கிற கூட்டத்திற்கு சாதகமாக அல்லது இணக்கமாக இல்லாத பட்சத்தில் பின்விளைவுகள் மிகக் கடினமானதாகவே இருக்கும் என்பதை நாம் அறிந்து புரிந்து வைத்திருக்க வேண்டும்.

எடுக்கும் முடிவும், கொடுக்கும் பதிலும் மிகச் சரியாக இருக்க வேண்டும். இல்லாமற்போனால்… எந்த பின்விளைவுகளுக்கும் நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். நீதிமொழிகள்: 11:14 – “ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்”. ஆலோசனை கேட்க வேண்டிய இடத்தில் கேட்க வேண்டியதுதான் நல்லது. தவறில்லை. ஆனால், முடிவு நாம்தான் தேவசித்தப்படி எடுக்க வேண்டும்.

ஜனங்களை நடத்த சாலமோன் கர்த்தரிடம் ஞானத்தைக் கேட்டான். மகனோ கர்த்தரிடம் கேளாமல் வாலிபரிடம் கேட்கிறான். அறிவில் முதிர்ச்சியும், ஆலோசனையில் தேவதயவும் நமக்கு கிடைக்கும்படி தேவனிடம் கேட்க வேண்டும்.

5.   கீர்த்தியில், வசனத்தில் வளர்ச்சி:

1சாமுவேல்: 3:19,20 – “ சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனேகூட இருந்தார்; அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்துபோக விடவில்லை” “சாமுவேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிதான் என்று தாண் முதல் பெயர்செபா மட்டுமுள்ள சகல இஸ்ரவேலருக்கும் விளங்கினது”.

காரணம்? “அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்துபோக விடவில்லை”

யோபு: 8:11 – “சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ? தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ?”. அதுபோல வேதவசனமில்லாமல் நம் ஆவிக்குரிய வாழ்விலும்,  உலக வாழ்விலும் எவ்வித வளர்ச்சியையும் காண இயலாது.

1பேதுரு: 2:3 – “நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்”.

சங்கீதம்: 92:12 – “நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்”.

பனையைப் போலும், கேதுருவைப் போலும் கர்த்தருடைய ஜனத்தின் வளர்ச்சி காணப்படும்.

ஏசாயா: 44:3-5 – “தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன். அதினால் அவர்கள் புல்லின் நடுவே நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள அலரிச் செடிகளைப்போல வளருவார்கள்”.

வசனத்தில் தாகமுள்ளவனுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள்:
1.   ஆசீர்வாதம் 2. அபிஷேகம், 3. பின்வரும் சந்ததிக்கு ஆசீர்வாதம் 4. அபரிமிதமான வளர்ச்சி

இதனால், இப்படிப்பட்டவர்களினால் சபைக்கு ஏற்படும் நன்மை:    ஊழிய வளர்ச்சி – சபை கட்டப்படுதல்

ஏசாயா: 44:5 – “ஒருவன் நான் கர்த்தருடையவன் என்பான்; ஒருவன், யாக்கோபின் பேரைத் தரித்துக்கொள்வான்; ஒருவன் தான் கர்த்தருடையவன் என்று கையெழுத்துப் போட்டு, இஸ்ரவேலின் நாமத்தைத் தரித்துக்கொள்வான்”.

6.   இயேசுவை அறிகிற அறிவில் வளர்ச்சி:

2பேதுரு: 3:18 – “நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்”.
அவரைக் குறித்து அறிகிற அறிவு நம்மை நித்திய ஜீவனுக்கு நேராக நடத்தும். யோவான்: 17:3 – “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்”.
பிலிப்பியர்: 3:8 – “என் கர்த்தராகிய இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்”.

பிலிப்பியர்: 3:10 – “… நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்”
கிறிஸ்து இயேசுவைக் குறித்து நாம் அறிகிற அறிவு குறைவானது. இன்னும் நாம் அவரை அறிய வேண்டிய பிரகாரம் இன்னுமதிகமாய் அறிய வேண்டும். அது நம் ஆத்துமாவை மென்மேலும் பலப்படுத்தும். விசுவாச வாழ்வில் ஸ்திரப்படுத்தச் செய்திடும்.

இவ்விதமாக, “தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக …” முன்னேறிச் செல்வோம். ஆவிக்குரிய வளர்ச்சியில் வரப்போகிற புத்தாண்டில் ஒரு உன்னத அனுபவத்தைப் பெறுவோம். கர்த்தர் தாமே நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்! அல்லேலூயா!

  
   




டிசம்பர் 04, 2016

“பட்சமாய் …”

Image result for 1Thess: 3:6,7

“பட்சமாய் …”

திறவுகோல் வசனம்:         1தெசலோனிக்கேயர்: 2:7,8 – “உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுவதுபோல, நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்”

“பட்சமாய்” – என்ற இந்த வார்த்தைக்கு “சார்பாக; பக்கமாக; சகாயமாக; ஆறுதலாக; உதவியாக; மனதுக்கு ஏற்ற விதமாக; இனிமையாக” - என்றெல்லாம் அர்த்தங் காணலாம்.

பட்சமாய் இருப்பவர்கள் நடந்து கொள்ளும் விதம்:

1.   தாயாக, தாய் மனம் கொண்டிருப்பார்கள்
2.   தாய் போன்ற பராமரிப்பும் காப்பாற்றும் தன்மையுமாயிருப்பார்கள்
3.   வாஞ்சையாயிருப்பார்கள்
4.   இரட்சிப்பிற்கேதுவான நற்செய்தியை அறிவிப்பார்கள்
5.   பிரியமாயிருப்பார்கள்
6.   ஜீவனைக் கொடுக்கவும் மனதாயிருப்பார்கள்
7.   பட்சமாயிருப்பார்கள்

பட்சமாய் இருப்பது என்பது ஒருதலைபட்சமாக ஒரு பக்கமாய் செயல்படுவதல்ல; இரண்டு பக்கமும் அதாவது இருதிறத்தாருக்கும் இருக்க வேண்டும். பட்சமாயிருப்பது என்பது இரண்டு பக்கமும் பரஸ்பரம் பரிமாறப்படுகிறதாய் இருக்க வேண்டும். எப்படியெனில் …

1தெசலோனிக்கேயர்: 3:6,7 – “இப்பொழுது தீமோத்தேயு உங்களிடத்திலிருந்து எங்களிடத்தில் வந்து, உங்கள் விசுவாசத்தையும் அன்பையும் குறித்தும், நீங்கள் எப்போதும் எங்களைப் பட்சமாய் நினைத்துக் கொண்டு, நாங்கள் உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறதுபோல நீங்களும் எங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறீர்கள் என்பதைக் குறித்தும், எங்களுக்கு நற்செய்தி சொன்னதினாலே, சகோதரரே, எங்களுக்கு நேரிட்ட எல்லா இக்கட்டிலும் உபத்திரவத்திலும் உங்கள் விசுவாசத்தினாலே உங்களைக் குறித்து ஆறுதலடைந்தோம்

சபையார் ஊழியர்கள் மேலும், ஊழியர்கள் சபையார் மேலும் ஒருவரிலொருவர் பட்சமாய் இருக்க வேண்டும் என்று அப்.பவுல் கூறுகிறார். இவ்வாறாகத்தான் தெசலோனிக்கேயா சபையார் பவுலின் மீதும், பவுல் தெசலோனிக்கேயா சபையார் மீதும் பட்சமாயிருந்தனர் என நிருபத்திலிருந்து அறிகிறோம். இதேபோல, ஒவ்வொரு குடும்பத்திலும், குடும்ப அங்கத்தினருக்குள்ளும், உறவுகளுக்குள்ளும் காணப்படுமானால் அக்குடும்பங்கள் எவ்வளவு இனிமையானவை என்பதை வார்த்தைகளினால் விவரிக்க இயலாது. அது கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். சபையானாலும், குடும்ப உறவுகளானாலும், சமுதாய நிலையானாலும் இவ்விதமாய் இருப்பது தேவசித்தமாகும். அல்லேலூயா!

குடும்பங்களில் ஒருவரிலொருவர் பட்சமாய் நடந்து கொண்டால்தான் சபை சாட்சியாக நன்றாக இருக்கும்; சபையில் ஒருவரிலொருவர் பட்சமாய் நடந்து கொண்டால்தான் சமுதாயம் நன்றாக இருக்கும்; சமுதாயம் ஒருவரிலொருவர் பட்சமாய் நடந்து கொண்டால்தான் தேசம் சீர்பட்டு நன்றாக இருக்கும். இப்படி எல்லா தரப்பிலும் பட்சமாக நடக்கும் பட்சத்தில் பரலோகை இவ்வுலகில் நாம் காண முடியும்.

ஆனால், குடும்பங்களிலும், சபைகளிலும், சமுதாயங்களிலும் ஒருவரிலொருவர் பட்சமாய் நடந்து கொள்கிறார்களா? ஏன் அவ்வாறு நடக்க இயலவில்லை? ஒருவரிலொருவர் பட்சமாய் நடந்து கொள்ள என்ன வழி? இதைக் குறித்து நாம் தியானிப்போம் வாருங்கள்.

குடும்பங்களில் பட்சமாயிருத்தல்


1.   பாரபட்சமற்ற பட்சமாயிருத்தல்:


ஆதியாகமம்: 37:3,4 – “இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான். அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டபோது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள்”.

யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பிடம் பட்சமாய் நடப்பதற்கு எது தடையாக இருந்தது?

யாக்கோபு, தன் குமாரர் எல்லாரிலும் யோசேப்பை அதிகமாய் நேசித்ததனால் – யோசேப்பின் சகோதரருக்குள்ளே “பொறாமை” என்கிற ஒரு தீய எண்ணம் உருவாகி அவனிடம் பட்சமாய் நடந்து கொள்ள முடியாமல் தடையாக நின்றதை காண்கிறோம்.

ஒன்று தகப்பனாகிய யாக்கோபு ஒருதலைபட்சமாக நடந்திருக்கக் கூடாது; அல்லது அவனது குமாரர்கள் தகப்பனுடைய உள்ளத்தைப் புரிந்து கொண்டு சரி போகட்டும் விடு என்று இசைந்து போயிருக்க வேண்டும். இது இரண்டுமே நடக்க வழியில்லை. காரணம் … ? யாக்கோபுக்கு வயதானகாலத்தில் பிறந்தபிள்ளையின்மேல் அதீத பாசம்; அவன் குமாரருக்கோ அதை புரிந்துகொள்ள இயலாத மதியீனம் நிறைந்த மனது இவையே காரணம். வயதில் முதிர்ந்த யாக்கோபு பிள்ளைகளின் மனதை புரிந்திருக்க வேண்டும். அப்படி புரிந்திருப்பானானால் மற்ற குமாரருக்கு முன்பாக பட்சமாய் நடந்து கொண்டிருக்க மாட்டான். எல்லாருக்கு முன்பாக அனைவரையும் சமமாக பாவித்து நடந்திருப்பான்.

தகப்பனை புரிந்து கொண்ட பிள்ளைகளானால் … “கடைசியாக பிறந்த தம்பி … நம் தகப்பன் பட்சமாய் நடப்பதுபோல நாமும் தம்பியிடம் பட்சமாய் நடப்போமே …” என்று சொல்லி நடந்திருப்பார்கள். ஆனால் இவை எதுவும் நடக்கவில்லை. ஒரு குடும்பத்திற்குள் பட்சபாதமோ, பொறாமையோ, பகையோ யாருக்குள்ளும் சிறிதேனும் வர அனுமதிக்கக்கூடாது. குடும்பத்தலைவரோ, தலைவியோ கண்டறிந்த மாத்திரத்தில் உடனே அதை ‘களை’ எடுக்க முயற்சிக்க வேண்டும். பட்சபாதமும் பொறாமையும் பகையும் யாரிடத்திலும் இராதபடி கவனமாய் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடின், அது பெரிய குடும்ப உறவுநிலைகளில் பெரும் சேதத்தை விளைவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கணவன் மனைவியினிடத்தில் பட்சமாயிருக்க வேண்டும்; மனைவி கணவனிடத்தில் பட்சமாயிருக்க வேண்டும்; பிள்ளைகள் பெற்றோரிடத்தில் பட்சமாயிருக்க வேண்டும்; பெற்றோர் பிள்ளைகளிடத்தில் பட்சமாயிருக்க வேண்டும்; மூத்தோர் இளையவரிடத்தில் பட்சமாயிருக்க வேண்டும்; இளையோர் மூத்தோரிடம் பட்சமாயிருக்க வேண்டும்; அப்படி இருக்க வேண்டுமானால், அன்பானாலும், உபசரிப்பானாலும், கரிசனையானாலும், அக்கறையானாலும், அனைத்தும் பட்சபாதமின்றி ஏற்றதாழ்வின்றி அனைவருக்கும் சமமாக பாவிக்கப்பட வேண்டியது அவசியம். நாம் பெற்ற நமது இரத்த சம்பந்தமான பிள்ளைகளல்லவா நமது பிள்ளைகள்? அப்படியானால் அவர்கள் நம்மைப்போலவே அதி புத்திசாலிகளாக இருந்து நமது கிரியைகள் எப்படிப்பட்டது? அதில் வித்தியாசம் உண்டா? என்பதை உடனே கண்டுபிடித்து விடுவார்கள். பாரபட்சமற்ற கிரியைகளை வெளிப்படுத்துங்கள்.

அன்புத் தாழ்ச்சியே பொறாமைக்கு காரணம்; பொறாமையே பகைக்கு காரணம்; பகையே கொலைக்கு காரணம். இதுதான் யாக்கோபின் குடும்பத்தில் நடந்த சம்பவங்களுக்கு அடிப்படை காரணம். இவை ஏதும் நம் குடும்பங்களில் ஏற்படா வண்ணம் பாரபட்சமற்ற அன்பு பகிரப்படட்டும். அனைவரிடமும் பட்சமாய் நடப்போமாக!

2.   பட்சமாய் பேசுதல்:


ஆதியாகமம்: 50:20,21 – “நீங்கள் எனக்கு தீமை செய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்து வருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார். ஆதலால், பயப்படாதிருங்கள்; நான் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடே பட்சமாய்ப் பேசினான்”.

யோசேப்பின் சகோதரர்கள் அவனுக்கு வெகுவாய் தீமை செய்தார்கள். ஆனால் அவனோ அதை எண்ணி பழிவாங்க துணியாமல், பயத்தோடிருந்த அவர்களுக்கு தைரியம் சொல்லி ஆறுதலாக பட்சமாய் பேசினான் என்று பார்க்கிறோம். இதுதான் நல்ல இரட்சிப்பின் அனுபவமுள்ள ஒரு ஆவிக்குரிய தேவபிள்ளையின் குணலட்சணம். இதைத்தான் ஆவிக்குரிய திவ்ய சுபாவம் என்று வேதம் கூறுகிறது. இதுபோன்ற திவ்விய சுபாவங்கள் நம்மில் வளர இடங்கொடுப்போமாக!

இவ்வாறாக அடைக்கலமாக தன்னிடமாய் வந்த ரூத்திடம், போவாஸ் பட்சமாய் பேசினதைக் காண்கிறோம். ரூத்: 2:12,13 – “உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான். அதற்கு அவள்: என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைக்க வேண்டும்; நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமானமாயிராவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி, உம்முடைய அடியாளோடே பட்சமாய்ப் பேசினீரே என்றாள்”. ஒரு குடும்பம் என்று சொன்னால் பட்சமாய் இருக்க வேண்டும். ஒருவரிலொருவர் பட்சமாய் நடப்பதும், பேசுவதும்தானே குடும்பத்தில் மகிழ்ச்சியைக் கொண்டு வரும்?! அப்படியிருக்கும்போது, பட்சமாய் நடப்பதிலும், பேசுவதிலும் என்ன தயக்கம் இருக்க முடியும்?!

சமுதாயத்தில் பட்சமாயிருத்தல்


1.   சமுதாயத்தில் பட்சமாயிருப்பவர்களே நமது சேர்க்கை


1நாளாகமம்: 12:8 – “காத்தியரில் பரிசையும் ஈட்டியும் பிடித்து, சிங்கமுகம் போன்ற முகமும், மலைகளிலிருக்கிற வெளிமான் வேகம் போன்ற வேகமுள்ளவர்களாயிருந்து, யுத்த சேவகரான பராக்கிரமசாலிகள் சிலரும் வனாந்தரத்திலுள்ள அரணான இடத்தில் இருக்கிற தாவீது பட்சமாய் சேர்ந்தார்கள்”.

சங்கீதம்: 118:6,7 – “கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்? எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்…” – என்று தாவீதரசன் கூறுகிறார். தேவனாகிய கர்த்தர் தாவீதின்பட்சமாய் இருக்கும்போது சகலமும் அவனுக்கு அநுகூலமாக இருக்கிறதைக் காண்கிறோம். கர்த்தர் பட்சமாய் இருக்கும்போது மனிதர்களும் பட்சமாய் வந்து சேருகிறதை காண்கிறோம்.
தாவீது கர்த்தரிடத்தில் பட்சமாய் இருந்தான்; கர்த்தர் தாவீதினிடத்தில் பட்சமாய் இருந்தார். அதன் விளைவு? சிங்கமுகம் போன்றவர்களும், வெளிமான் வேகமுடையவர்களும், யுத்த பராக்கிரமசாலிகளும் அவன் பட்சமாய் வந்து சேருகிறதை காண்கிறோம்.

சிங்கமுகம் – தாவீதின் சத்துருக்களுக்கு
வெளிமான் வேகம் – தாவீதின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு
யுத்த சேவகரான பராக்கிரமசாலிகள் – தாவீதின் சத்துருக்களை முறியடிப்பதற்கு

அது மட்டுமா?

1நாளாகமம்: 12:22 – “அக்காலத்திலே நாளுக்குநாள் தாவீதுக்கு உதவி செய்யும் மனுஷர் அவனிடத்தில் வந்து சேர்ந்தபடியால், அவர்கள் தேவசேனையைப்போல மகா சேனையானார்கள்”. கர்த்தரை தாவீது தன் பட்சமாய் எப்போதும் தக்க வைத்துக் கொண்டான். அதன் பலனை அவன் கண்டான். நாம் என்ன செய்யப் போகிறோம்?

சங்கீதம்: 146:5 – “யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்”
நம்மைச் சுற்றிலும் உள்ள சமுதாயத்தில் உள்ள பலவான்களையும் பராக்கிமசாலிகளையும் நம்பட்சத்தில் பட்சமாய் வரவழைக்க நம் தேவனால் கூடும். நாம் கர்த்தருடைய பட்சத்திலிருந்தால் … அப்படிப்பட்டவர்களை அவர் நம்பட்சத்தில் சேர்ப்பார். பட்சமாயிருப்பவர்களே நமது சேர்க்கையாயிருக்கட்டும். தேவனுடைய ராஜ்யத்தை கட்ட தடையாயிருக்கும் தடைகளை முறியடிக்க இப்படிப்பட்ட பட்சமாய் நடப்பவர்கள் நம்மைச் சுற்றி, நமது சபைகளைச் சுற்றி காணப்படுவார்களாக!

2.   சமுதாயத்தில் பட்சமாய் பேசும் அதிகாரிகள்:


2நாளாகமம்: 30:22 – “கர்த்தருக்கு அடுத்த காரியத்தில் நல்ல உணர்வுள்ள எல்லா லேவியரோடும் எசேக்கியா பட்சமாய்ப் பேசினான்;…”
எசேக்கியா இராஜா, லேவியர்களோடு இணக்கமாய் பட்சமாய் பேசினான் என்று வாசிக்கிறோம். அதனால் விளைந்தது என்ன? ஜனங்கள் பஸ்காவை ஆசரித்தனர்; ஏழுநாள் பண்டிகைகளை கொண்டாடினர்; ஸ்தோத்திரபலிகளை கர்த்தருக்கு ஏறெடுத்தனர்; கர்த்தரை துதித்துக் கொண்டிருந்தனர். 

ஆராதனைக்கு எவ்வித தடைகளும் இல்லை. ஆவிக்குரிய வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் ஊக்குவிப்பாக இருந்தது. அதுபோல, நம்மை ஆளும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் நம்மிடம் பட்சமாய் பேசுகிறவர்களுமாய், ஆவிக்குரிய ஆராதனைகளுக்கு உதவிகரமாய், சுவிஷேச நற்செய்திப் பணிக்கு திறந்த வாசலாய், ஆலயத்திற்கு இடம் வாங்க, கட்டிடம் கட்ட அனுமதிக்கிறவராய், தேவஜனங்களுக்கு பாதுகாவலராய் இருக்க கர்த்தர் நம்பட்சத்தில் இருக்க பிரயாசமெடுப்போம். அவர் நம்பட்சத்தில் இருந்தால்… இருக்கும்படி நாம் நடந்து கொண்டால் சமுதாயத்தில் இருக்கும் அதிகாரிகளும், ஆட்சியாளர்களும், அதிகாரங்களும் நம்மிடம் பட்சமாய் பேசிட கர்த்தர் அருள் செய்வார்.

அப்.பவுல் தன் பிந்திய அந்திய காலத்தில் சுவிசேஷத்தை அறிவிக்க தடையேதும் இரா வண்ணம், அகுஸ்து பட்டாளத்தைச் சேர்ந்த யூலியு என்னும் பேர் கொண்ட நூற்றுக்கு அதிபதி மூலம் தேவன் பவுலை பட்சமாய் நடத்திட உதவினார்.

அப்போஸ்தலர்: 27:1,3 – “… பவுலையும் காவலில் வைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அகுஸ்து பட்டாளத்தைச் சேர்ந்த யூலியு என்னும் பேர் கொண்ட நூற்றுக்கு அதிபதியினிடத்தில் ஒப்புவித்தார்கள். … யூலியு பவுலைப் பட்சமாய் நடப்பித்து, அவன் தன் சிநேகிதரிடத்திலே போய்ப் பராமரிப்படையும்படிக்கு உத்தரவு கொடுத்தான்”.

மெலித்தா தீவிக்கு வந்தபோது அத்தீவில் அப்.பவுல் சுவிஷேசத்தை அறிவிக்க, மெலித்தா தீவின் தலைவன் புபிலியு என்பவன் பட்சமாய் ஏற்றுக் கொண்டான் என்று வாசிக்கிறோம்.

அப்போஸ்தலர்: 28:7 – “தீவுக்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பேர் கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்குச் சமீபமாயிருந்தது; அவன் எங்களை ஏற்றுக் கொண்டு, மூன்றுநாள் பட்சமாய் விசாரித்தான்”.

சபையில் பட்சமாயிருத்தல்


1.   விதவைகள் விஷயத்தில் பட்சமாயிருத்தல்:


அப்போஷ்தலர்: 6:1 – “அந்நாட்களில், சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்”.

ஆதித்திருச்சபையில், பந்தி விசாரிப்பில் கிரேக்க விதவைகளை சரிவர விசாரிப்பு இல்லை என்ற ஒரு புகார் எழுந்ததை வாசிக்கிறோம். விதவைகள் ஏற்கனவே, தங்கள் புருசரை இழந்து பல இன்னல்களுக்கு ஆளானவர்கள். எனவே, அவர்கள் மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டு பலவீனமான நிலையில் இருப்பவர்கள். அவர்களுக்கு தேவை அன்பும் அரவணைப்பும் சரியான விசாரிப்பும். இது ஆதிதிருச்சபையில் சற்று குறைவுபட்டுவிட்டது. இதனால் சபையில் முறுமுறுப்புகள் ஏற்படுகிறதை காண்கிறோம்.

விதவைகள் விஷயத்தில் சரியான விசாரிப்பு திட்டமாய் ஏற்படுத்தப்பட வேண்டும். அவர்கள் பலவீனமானவர்களானபடியால் அவர்களிடத்தில் பட்சமாய் நடந்திட வேண்டும். விதைவைகள் மட்டுமல்லாது, கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள், முதியோர் – இவர்களெல்லாம் சபையில் இருப்பார்களேயானால் சரியான முறையான அன்பான விசாரிப்பு இவர்களுக்கு அதிகம் தேவைப்படும். அதை பாரபட்சமின்றி பட்சமாய் நடப்பிக்க பிரயாசப்படுவோமாக!

2.   புறஜாதிகள் விஷயத்தில் பட்சமாயிருத்தல்:


கலாத்தியர்: 2:11-14 – “… பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ் சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன். எப்படியெனில், யாக்கோபினிடத்திலிருந்து சிலர் வருகிறதற்கு முன்னே அவன் புறஜாதியாருடனே சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பயந்து விலகிப் பிரிந்தான். மற்ற யூதரும் அவனுடனே கூட மாயம் பண்ணினார்கள்; அவர்களுடைய மாயத்தினாலே பர்னபாவும் இழுப்புண்டான். இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச் சொன்னது என்னவென்றால்: யூதனாயிருக்கிற நீர் யூதர் முறையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்து கொண்டிருக்க, புறஜாதியாரை யூதர் முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக் கட்டாயம் பண்ணலாம்?”.

சபையில் இப்படிப்பட்ட ஒழுங்கீனங்கள் வருவதை தேவனாகிய கர்த்தர் விரும்பவில்லை. சபையின் மேய்ப்பர்கள் மனிதருக்கு அஞ்சாமல், சத்தியத்திற்கு கட்டுப்பட்டு வசனத்தை நிறைவேற்ற பாடுபட வேண்டும். மனுசனுக்கேற்ப வேஷமிடாமல், மனுசரைப் பிரியப்படுத்தாமல், தேவநீதியை நிறைவேற்றும்படி புறஜாதியார் விசயத்தில் பட்சமாய் நடக்க பிரயாசப்பட வேண்டும். சபை போதகப் பிதாக்கள் மட்டுமல்ல, சபையில் உள்ள தனவந்தர்களும், மேன்மக்களும், புறஜாதியார் விஷயத்தில் பட்சமாய் நடந்து கொண்டு, தங்களில் குற்றம் சுமராதிருக்க சரியான சத்தியத்தில் போதிக்கப்பட வேண்டும்.

குடும்பங்களிலும், சபைகளிலும், சமுதாயங்களிலும் ஒருவரிலொருவர் பட்சமாய் நடந்து கொள்கிறார்களா? ஏன் அவ்வாறு நடக்க இயலவில்லை? ஒருவரிலொருவர் பட்சமாய் நடந்து கொள்ள என்ன வழி? இதுதான் கேள்வி. அதற்கான விடை இதுதான்:

குடும்பங்களிலும், சபைதனிலும், சமுதாயத்திலும் பட்சமாய் நடந்திட அன்பு தாழ்ச்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுதல் அவசியம். ஒவ்வொருவரும் யாவரிடமும் பட்சமாய் நடந்து கொள்ள உறுதியான தீர்மானம் எடுப்போமானால் நல்லதொரு மாற்றத்தை ஆவிக்குரிய வாழ்விலும், சபைகளிலும், சமுதாயத்திலும் நாம் காணலாம். ஆமென்! அல்லேலூயா!

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
  



டிசம்பர் 03, 2016

பொருத்தனையின் புத்திரனும் பிரதிஷ்டையின் புத்திரனும்

Image result for 1samuel 2 3Image result for judges:13

பொருத்தனையின் புத்திரனும் பிரதிஷ்டையின் புத்திரனும்

திறவுகோல்வசனம்: எபிரெயர்: 11:32 – “பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ்சொல்ல வேண்டுமானால் காலம் போதாது”.

மேற்கண்ட திறவுகோல்வசனத்தைக் கொண்டு முன்பே நாம் “உறவாடுதலா? உபயோகப்படுதலா?” என்ற தலைப்பின்கீழ் தியானித்தோம். (அதற்கான லிங்க்: http://nesarin.blogspot.in/2016/11/blog-post_19.html இதுதான்). இன்று இதே வசனத்தைக் கொண்டு “பொருத்தனையின் புத்திரனும் பிரதிஷ்டையின் புத்தினும்” என்கிற தலைப்பில் நாம் தியானிக்கப் போகிறோம்.

இந்த வசனத்தில் ஆறு பேரை எபிரேய நிருபக்காரன் குறிப்பிடுகிறார். இந்த ஆறு பேரில் தாவீது ஒருவன் மட்டும் அரசன். தாவீதைத் தவிர மற்ற ஐந்து பேரும் நியாயாதிபதிகள். இதில் சிம்சோன், சாமுவேல் மட்டும் தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள்.  தனிச்சிறப்பிற்கு காரணம் இவர்கள் இருவரும் நசரேய விரதம் பூண்டவர்கள்.  

நசரேய விரதத்துவத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று, பெற்றோர்களின் பொருத்தனையினால் ஏற்படுவது; மற்றொன்று, தேவனே நசரேயனாக அழைப்பது.

பொருத்தனையின் புத்திரன் சாமுவேல்:

 1சாமுவேல்: 1:11 – “சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகலநாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்பேன்; அவன் தலையின் மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணினாள்”.

குழந்தையில்லாத அன்னாள், தன் நிந்தை நீங்க ஒரு ஆண்குழந்தைபெற வேண்டினாள். மலடி என்கிற அவப்பெயர் நீங்க குழந்தை கேட்பது சரிதான். ஆனால், அதை கர்த்தருக்கென்று நசரேய விரதங்காக்கும்படி அதை வளர்ப்பேன் என சொல்கிறாள் பாருங்கள் அந்த இடத்தில்தான் கர்த்தருக்கு முன்பு உயர்வாக அன்னாள் நிற்கிறாள். பொதுநலத்தில் சுயநலத்தைக் கலப்பவர்கள் இவ்வுலகில் அநேகர் உண்டு. ஆனால், சுயநலத்தில் பொதுநலத்தை கலந்தவள் இந்த அன்னாள் என பார்க்கிறோம்.

அன்னாளின் பொருத்தனையின் விளைவால் வந்தவன்தான் சாமுவேல். எனவேதான், சாமுவேலை “பொருத்தனையின் குமாரன்” என்றும் “பொருத்தனையின் புத்திரன்” என்றும் குறிப்பிடுகிறேன். பொருத்தனையின் மூலம் நசரேயனானவன் சாமுவேல்.

பிரதிஷ்டையின் புத்திரன் சிம்சோன்:

நியாயாதிபதிகள்: 13:2-5 – “அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா. அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள். கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்கு தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ, பிள்ளை பெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய். ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்றார்”.

மனோவாவின் மனைவியும் பிள்ளை பெறாத மலடிதான். ஆனால் அதற்காக அவள் கவலைப்பட்டது போல தெரியவில்லை. குழந்தை வேண்டுமென்று எவ்வித பொருத்தனையும் செய்துகொள்ளவில்லை. மலடி என்று சொன்னால் … திருமணம் முடிந்து ஒன்றிரண்டு வருடங்களில் குழந்தையில்லாமல் இருப்பவளை குறிப்பதல்ல. குறைந்தது ஏழு வருடங்களுக்கு மேல் சென்றும் ஒருத்திக்கு குழந்தை இல்லை என்றால் … அப்பொழுது சமுதாயத்தில் அவளை மலடி என்று சொல்வது அக்காலத்திலிருந்து இக்காலம் வரை உள்ள வழக்கம் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இருப்பினும், மனோவாவோ, அவனது மனைவியோ அதைக்குறித்து கவலைபட்டதாக வேதம் கூறவில்லை. குழந்தையற்ற இவளை கர்த்தருடைய தூதனானவர் சந்தித்து, நசரேய விரதங்காக்கும் ஒரு குழந்தையை அவள் பெற்றெடுத்து கர்த்தருக்காக வளர்க்க வேண்டும் என கட்டளையிடுகிறதைக் காண்கிறோம். தேவனாகிய கர்த்தரே இவர்களுக்குப் பிறக்கப்போகிற குழந்தையை நசரேய விரதம் பூண்டவனாக இருக்கும்படி தெரிந்து கொள்கிறார். சிம்சோன் பிறக்கும்போதே தேவனால் நசரேய விரதமிருக்கும்படி பிரதிஷ்டைப் பண்ணப்பட்டவனாகவே பிறக்கிறான். 

தேவனாகிய கர்த்தரே, அவன் நசரேயனாயிருப்பான் என முன்குறித்து விட்டார். இது எவ்வளவு பெரிய சிலாக்கியம். ஒரு மனிதன் இவனை நசரேயனாக்கவில்லை. தேவனே இவனை நசரேயனாக்கினார் என காண்கிறோம். எனவேதான் இவனை தேவனால் பிரதிஷ்டைப் பண்ணப்பட்ட “பிரதிஷ்டையின் புத்திரன்” என்றும் “பிரதிஷ்டையின் குமாரன்” என்றும் குறிப்பிடுகிறேன்.

சாமுவேல் – பொருத்தனையினால் நசரேயனாக்கப்பட்டவன்

சிம்சோன் – தேவனால் நசரேயனாக்கப்பட்டவன்

நசரேய விரதத்துவத்தைக் குறித்து விபரமறிய: http://nesarin.blogspot.in/2016/11/blog-post_17.html இதை கிளிக் செய்க.

நசரேயனாக தெரிந்து கொள்ளப்பட்டோ அல்லது அழைக்கப்பட்டோ எப்படியிருப்பினும் … பிறப்பும் சரி, வளர்ப்பும் சரி நசரேயனுக்குரிய முறைமைகளின்படி மாறாமல், மீறாமல் வளர்க்கப்பட வேண்டும். நசரேய விரதம், பிரதிஷ்டை காக்கப்பட வேண்டும். நசரேய விரதம் காக்கப்பட முதலில் பெற்றோரும், பின்பு நசரேய விரதம் காப்பவனும் பொறுப்பாவார்கள். நசரேய விரதம் பாதியில் வருவதல்ல; பிறப்பிலிருந்தே அது ஆரம்பமாவதால் முதலில் பெற்றோர் அதைக் காத்து நடக்கவும், அதின் வழியில் போதிக்கவும் கடமைப்பட்டுள்ளனர். அதை சிறுபிராயத்திலிருந்தே அக்குழந்தைக்கு அறிவுறுத்தவும், போதிக்கப்படவும், வழிநடத்தவும் வேண்டிய முக்கிய பொறுப்பு பெற்றோரைச் சார்ந்தது. இம்முறை இவ்விருவர் (சாமுவேல், சிம்சோன்) விஷயத்திலும் சரிவர பின்பற்றப்பட்டதா? என்பதை சற்று ஆய்வு செய்வோம்.

சாமுவேலின் பெற்றோர்


அ) பொருத்தனையை நிறைவேற்றுதலில் உண்மை:


நசரேய விரதம் காக்க சாமுவேலின் பெற்றோர் என்ன செய்தார்கள்? ஒன்றும் இல்லை. பெற்றோர் என்பதை விட தாய் அன்னாள் என்பது மிகப் பொருத்தமாயிருக்கும். அன்னாளின் கணவனாகிய எல்க்கானா இதில் அக்கறையோ கவனமோ செலுத்தியதாக தெரியவில்லை. ஏனெனில், அவனுக்கு இளைய மனைவியினிடத்தில் ஏற்கனவே குழந்தைகள் இருப்பதினால் இதை அவன் அவ்வளவு பெரிதாக கண்டுகொள்ளவில்லையென புரிகிறது. அவனது மனநிலை … எப்படியோ அன்னாளின் நிந்தை நீங்கயது. அம்மட்டும் சரி என்பது அவனது நிலைப்பாடாக இருந்திருக்கலாம். பெற்றதாய்க்குத்தானே பிள்ளையின் அருமை தெரியும் என்பதுபோல அவளே சாமுவேல் விஷயத்தில் முழு பொறுப்புள்ளவளாக செயல்படுகிறதை வேதத்திலே வாசிக்கிறோம்.

1சாமுவேல்: 1:24,25 – “அவள் அவனைப் பால் மறக்கப்பண்ணின பின்பு, … அவனையும் கூட்டிக் கொண்டு, சீலோவிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனாள்; பிள்ளை இன்னும் குழந்தையாயிருந்தது. அவர்கள் ஒரு காளையை பலியிட்டு, பிள்ளையை ஏலியினிடத்தில் கொண்டு வந்து விட்டார்கள்.”

1சாமுவேல்: 1:28 – “அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டபடியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்”.

பொருத்தனையை தன் கணவனுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைத்து, பின்பு இருவரும் சேர்ந்து கர்த்தருக்கு பொருத்தனையை நிறைவேற்றுகிறதை காண்கிறோம்.

ஆ) வளர்ப்பு நிலையில் உண்மை:


பிள்ளையாண்டான் பெற்றோரை பிரிந்திருக்கும்படி அந்தச் சிறிய வயதில் எப்படி முடிந்தது. ஏலியினிடம் கொடுக்கும்போது “பிள்ளை இன்னும் குழந்தையாயிருந்தது” (1சாமுவேல்: 1:24) என வேதம் குறிப்பிடுகிறது. தோராயமாக சுமார் ஐந்து அல்லது ஆறு வயதிருக்கலாம். அந்த வயதில் ஒரு காலத்தில் பிள்ளைகள் பள்ளியில் சேர்க்கும்போது நமது பெற்றோர்கள் பட்ட அவஸ்தையை அவர்கள் மூலம் கேட்டிருக்கிறோமல்லவா? அப்படியிருக்க… எப்படி சாமுவேல் மட்டும் தன் பெற்றோரை பிரிந்து ஏலியினிடம் இருக்க முடிந்தது? அங்குதான் பெற்றோரின் வளர்ப்பு நிலையை நாம் கவனிக்க வேண்டும்.

அவனை வளர்க்கும்போதே கீழ்க்கண்டபடி இப்படி …சொல்லி சொல்லி வளர்த்திருப்பார்கள். 

“நீ பொருத்தனையினால்தான் பிறந்தாய். நீ எனக்கு  எங்களுக்கு சொந்தமானவன் இல்லை. நீ கர்த்தருக்கு சொந்தமானவன். பால் மறந்தவுடன் கர்த்தருடைய ஆலயத்தில் உன்னை விட்டு விடுவோம். அங்கு தேவனுடைய மனுஷன் ஏலி இருக்கிறார். அவர் உன்னை கர்த்தரிடமாய் நடத்துவார். அவருக்கும் , கர்த்தருக்கும் சேவை செய்வதற்கென்றே நீ பிறந்திருக்கிறாய். எங்களுக்குக்கூட கிடைக்காத மாபெரும் பாக்கியம் உனக்கு கிடைத்திருக்கிறது. சிலூவிலே இருக்கிற ஆலயம் எவ்வளவு அழகானது. நம் தேவனாகிய கர்த்தர் அங்கே வாசமாயிருக்கிறார். அவர் உன்னோடிருப்பார். உன்னுடன் வாசம்பண்ண விரும்புகிறார். உன்னோடு பேசுவார். நீ அவருக்கு சொந்தமானவன் நீ விசேஷமானவன். கர்த்தருக்கென்று நசரேய விரதங் காப்பவன். அதனால்தான் பிறந்த முடி உனக்கு எடுக்காமலும், திராட்சரசங் குடிக்க அனுமதியாமலும் உன்னை கர்த்தருக்கென்று பாதுகாப்பாக காத்து வருகிறோம். நீயும் நசரேய விரதத்தை கடைசி வரை காத்து வர வேண்டும். பெற்றோர்களுடைய அன்பைவிட கர்த்தருடைய அன்பு மேலானது. அவரது ஊழியருடைய அன்பு உனக்கு கிடைக்கும். நீ பாக்கியம் பெற்றவன். எங்களோடு இருப்பதைவிட கர்த்தருடைய ஆலயத்தில் வாசமாயிருப்பதுதான் உனக்கு நலம். கர்த்தருடைய கட்டளையை காத்து நடப்பாயானால் கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார். உன்னை உபயோகப்படுத்துவார். வருடம் ஒருமுறை நாங்கள் வந்துவந்து உன்னை பார்ப்போம். நாங்கள் உன்னை பார்ப்பதைவிட கர்த்தர் உன்னை பார்த்துக் கொள்வார். அதுவே உனக்கு மேன்மையானது. இவைகளை செய்வதுதான் என்னையும், உன் தந்தையையும் மனமகிழ்ச்சியாக்கும். அப்பொழுதுதான் நீ நசரேய விரதங்காக்கும் நல்ல பிள்ளையாய் இருப்பாய்”.

இப்படியெல்லாம் அன்னாள் சொல்லி சொல்லி வளர்த்திருப்பாளா?! என சந்தேகிக்கிறவர்களுக்கு நான் சொல்வது இதுதான்… 1சாமுவேல்: 2:1-10 வரை உள்ள வசனங்களை வாசித்துப் பாருங்கள். அங்கே அன்னாளின் ஜெபமும் ஜெபத்தில் சொன்ன வார்த்தைகளின் வல்லமையும், பொருளையும் அறியலாம். இது ஏதோ ஒருநாள் மட்டும் ஜெபித்த ஜெபமாக நாம் கருத இயலாது. திடீரென ஜெபிக்கிறவர்களுக்கு இப்படிப்பட்ட ஜீவனுள்ள ஜெபங்கள் வாயில் வந்துவிடாது என்பதை நாம் அறிவோம். அனுதினமும் கர்த்தரிடமாய் அன்னாள் கருத்தாய் ஜெபிக்கிறவள். அந்த ஜெபத்தைக் கர்த்தர் கேட்டாரோ இல்லையோ… மடியில் படுத்துக் கொண்டு பால் குடித்துக் கொண்டிருந்த சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் நன்கு கவனமாய் கேட்டிருப்பான். கருவறையில் இருக்கும் கருவே கேட்கின்ற நிலையில் குழந்தை இருக்கும் என அறிவியலாளர்களால் நிரூபிக்கப்பட்டிருக்கிறதே!   அப்படியிருக்க, சாமுவேல் கேட்டிருக்க மாட்டானா? என்ன?!

சபையை குறித்து, போதகர்களைக் குறித்து, ஊழியங்களைக் குறித்து குறைசொல்லி வரும் காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். அக்காலத்தில் பாருங்கள். அன்னாள் தன் குழந்தையிடம் எதை சொல்லி வளர்க்க வேண்டும் என்பதை நன்கு அறிந்திருந்தாள். அவனது பிரதிஷ்டையைப் பற்றி, பொருத்தனையைப் பற்றி, ஆலயத்தைப் பற்றி, ஆசாரியனைப்பற்றி, எதிர்காலத்தைப் பற்றி, தேவனாகிய கர்த்தரைப் பற்றி மிக கவனமாக பக்தி விருத்திக்கேதுவாக தன் மகனுக்கு போதித்து வளர்த்திருக்கிறாள். அப்படி வளர்த்ததினால்தான் சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் தன் பெற்றோரை அச்சிறிய வயதில் பிரிந்து ஏலியிடம் ஆலயத்திலேயே தங்க முடிந்தது என அறிகிறோம்.  

இ) விசுவாசத்தில் உண்மை:


ஏலியின் நிலை:

“ஏலி மிகுந்த கிழவனாயிருந்தான்” (1சாமுவேல்: 2:22)
கண்களில் வெளிச்சமற்றவன் (1சாமுவேல்: 3:2)
மக்களின் மனநிலை அறியாதவன் (1சாமுவேல்: 1:13).
பிள்ளைகளை கர்த்தருக்குள் கர்த்தருக்கேற்ற பயத்தில் வளர்க்காதவன் (1சாமுவேல்: 2:12)
கர்த்தருடைய எச்சரிப்பை உதாசீனப்படுத்துகிறவன் (1சாமுவேல்: 2:27-36; 3:18)

ஏலியின் பிள்ளைகள் நிலை: (ஓப்னி, பினெகாஸ்)

1சாமுவேல்: 2:12 – “ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை”.
1சாமுவேல்: 2:17 – மனுஷர் கர்த்தரின் காணிக்கையை வெறுக்கும்படி செய்தார்கள்.
1சாமுவேல்: 2:22 – ஆசரிப்புக்கூடார வாசலில் கூடுகிற ஸ்திரீகளோடு சயனித்தார்கள்.
1சாமுவேல்: 2:25 – தகப்பன் சொல்லை மதியாதவர்கள்
1சாமுவேல்: 2,17 – இவர்களின் பாவம் கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருந்தது

அன்னாளின் நிலை:

அன்னாள் ஏலியைக் குறித்தும், ஏலியின் பிள்ளைகளைக் குறித்தும் அறியாதவளில்லை. அவர்களின் அத்தனை நீதிகேடுகள், முறைகேடுகள் இஸ்ரேலில் உள்ள அனைவருக்கும் பிரசித்தமாகியிருக்கும்போது, அன்னாளுக்கும் எல்க்கானாவுக்கும் தெரியாமலா போகும்!? 

தெரிந்திருந்தாலும்… அவர்கள் கர்த்தர்மேல் விசுவாசம் உள்ளவர்கள். நான் ஆராதிக்கும் தேவன் நல்லவர். என்னையும், என் மகனையுமோவென்றால் அவர் நேசிக்கிறார். என் பொருத்தனைகளை நான் நிறைவேற்றுவதில் உண்மையாயிருந்ததுபோல, கர்த்தரை நம்பி கர்த்தரிடத்தில் தன் மகனை விட்டு வந்திருக்கிறேன். அவர் அனைத்தையும் பார்த்துக் கொள்வார். 

ஏனெனில், அவர் உண்மையுள்ளவர். ஆசாரியன் உண்மையில்லாமல் போகலாம். ஆசாரியனுடைய பிள்ளைகள் ஒழுக்கமில்லாமல் திரியலாம். ஆனால், நான் ஆராதிக்கும் எங்கள் தேவன் பரிசுத்தர். உண்மையுள்ளவர். உடன்படிக்கையை காப்பதில் வல்லவர். வாக்கு மாறாதவர். தன்னை நம்பியவர்களை அவர் கைவிடாதவர் என்பதில் அன்னாள் உறுதியான விசுவாசத்தில் இருந்ததினால்தான், சாமுவேலை ஏலியின் வசம் ஒப்புவிக்க முடிந்தது.

தனது பொருத்தனையை நிறைவேற்ற வேண்டியது தனது கடமை. பொருத்தனையாக விடப்பட்ட பொருத்தனையின் புத்திரனை வழி நடத்துவது இனி தேவனாகிய கர்த்தர்தான் என்கிற விசுவாசம் அவளுக்கு இருந்திருக்க வேண்டும். தேவனாகிய கர்த்தர்மேல் வைத்த நம்பிக்கையும், விசுவாசமும்தான் அவளை இப்படி செயல்பட வைத்திருக்க வேண்டும்.

சாமுவேலின் நிலை:

அன்னாள் எப்படி இருந்தாளோ, அப்படித்தான் சாமுவேல் இருந்தான். விதை ஒன்று போட, சுரை ஒன்றா முளைக்கும் என பெரியவர்கள் சொல்லும் வண்ணம் சாமுவேல் அன்னாளைப்போலவே, கர்த்தருக்குப் பயந்தவனாய், கீழ்படிகிறவனாய், பரிசுத்தமுள்ளவனாய், பக்தியுள்ளவனாய், விசுவாசமுள்ளவனாய், கர்த்தருடைய சத்தங் கேட்கிறவனாய் இருப்பதைக் காண்கிறோம்.

“அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை” (1சாமுவேல்: 3:1) அப்படிப்பட்ட நாட்களில் சாமுவேல் எப்படி இருந்தான்?

1சாமுவேல்: 2:11 – “அந்தப் பிள்ளையோ ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தான்”

1சாமுவேல்: 2:18 – “சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் சணல்நூல் ஏபோத்தைத் தரித்தவனாய்க் கர்த்தருக்கு முன்பாகப் பணிவிடை செய்தான்”

1சாமுவேல்: 2:26 – “சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்து கொண்டான்”.

1சாமுவேல்: 3:19 – “சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனேகூட இருந்தார்; அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்துபோக விடவில்லை”.

அன்னாள் செய்த பொருத்தனையை சாமுவேல் வீணடித்துவிடவில்லை. காரணம்? அன்னாளின் பக்திக்குரிய வளர்ப்பு அப்படி. சாமுவேல் அதை தனது மரணபரியந்தம் காப்பாற்றினான். 1சாமுவேல்: 3:20 – “சாமுவேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிதான் என்று தாண் முதல் பெயர்செபா மட்டுமுள்ள சகல இஸ்ரவேலருக்கும் விளங்கினது”.

ஒரு குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு அன்னாள் – எல்க்கானா தம்பதிகள் மூலம் நாம் அறியலாம்.

 சிம்சோனின் பெற்றோர்


சிம்சோனின் தாயின் பெயர் சொல்லப்படவில்லை. தகப்பன் மனோவா என்று மட்டுமே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. காரணம் ஏதாகிலும் உண்டா என நமக்கு புலப்படவில்லை. ஒன்று மட்டும் தெரிகிறது. மனோவா அளவிற்கு அவன் மனைவி இல்லை. கர்த்தருடைய தூதனானவர் தன்னிடம் இவ்விதமாய் சொன்னார் என் தன் கணவனிடத்தில் அவள் சொன்னபோது, மனோவா உடனே கர்த்தரிடமாய் ஜெபம் பண்ணினான் (நியாயாதிபதிகள்: 13:8) என வாசிக்கிறோம். மனோவா மிகுந்த பக்தியுள்ளவன் என இதன் மூலம் நமக்கு தெரிய வருகிறது.

கர்த்தருடைய தூதனானவர் மனோவாவிடம் சொல்லும்போது அவளும் தீட்டுப்படாதபடிக்கு தன்னை காத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிடுகிறதை காணும்போது (நியாயாதிபதிகள்:13:14) மனோவாவின் மனைவியினிடத்தில் கர்த்தருக்கு பிடித்தமில்லாத ஏதோ ஒரு விஷயம் மறைவாக இருக்கிறது எனவும், அதை சிம்சோன் பிறக்குமளவும் பரிசுத்தமாய் காத்துக் கொள்ள வேண்டும் என்பது போல இருக்கிறது என்பது எனது தனிப்பட்ட கருத்து. சிம்சோனின் தாயாரின் பெயர் குறிப்பிடப்படாமல் அந்த ஸ்திரீ என குறிப்பிடுவது காணும்போது வேண்டாவெறுப்பாக சொல்லப்பட்டது போல தோன்றுகிறது. இதையேன் இப்படி சொல்கிறேன் என பின்வரும் காரியங்களில் நீங்கள் அறியலாம்.

“தாயைப்போல பிள்ளை; நூலைப்போல சேலை” என்றும் “தாயை தண்ணீர்த்துறையில் பார்த்தால், பிள்ளையை பார்க்க தேவையில்லை” என்றெல்லாம் கிராமங்களில் பழமொழி சொல்வார்கள். அதைப்போல தாய் எவ்வழியோ பிள்ளையும் அவ்வழி. பிள்ளை நசரேய விரதங்காக்க வேண்டுமானால், பிள்ளையின் தாயும் அக்குழந்தையைப் பெறுமளவும் சில கட்டுபாடுகளுடன் இருப்பது தேவனுடைய விருப்பம். அதுமட்டுமல்ல… பிள்ளை பெற்றவுடன் அதை எப்படி வளர்க்க வேண்டும் என்று கர்த்தருடைய தூதனானவர் சொன்னாரோ அதேபோல வளர்ப்பதில் ஜாக்கிரதை உணர்வு வேண்டும். எப்படி வளர்க்க வேண்டும்? என்று தூதனானவரிடம் கேள்வி கேட்டதெல்லாம் சரிதான். அப்படி சொல்லி சொல்லி அல்லவா வளர்க்க வேண்டும். அப்படி வளர்க்காததினால் பின்னாட்களில் என்ன நடந்தது என சிம்சோனின் வாழ்வைக்குறித்து வேதத்தில் வாசிக்கிறோமே!

1.   வெறுப்பை ஊட்டி வளர்க்கவில்லை:


நியாயாதிபதிகள்: 14:2 – “… தன் தாயையும் தகப்பனையும் நோக்கி: திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டேன்; அவளை எனக்கு கொள்ள வேண்டும் என்றான்”
பெலிஸ்தியரில் மட்டுமல்ல, புறஜாதிகள் எவற்றிலேயும் பெண் கொள்ளக்கூடாதென இஸ்ரவேலரெல்லாரும் அறிந்திருந்த ஒரு வெளிப்படையான சத்தியம். அப்படியிருக்க, சிம்சோன் பெலிஸ்திய பெண்தான் வேண்டும் என தன் தாய் தகப்பனிடம் துணிகரமாக கேட்கிறான் என்றால்… அவனது வளர்ப்பு நிலை சரியில்லை என்றுதானே அர்த்தமாகிது. அவனது தாய் சிறு பிராயத்திலிருந்தே என்ன சொல்லி வளர்த்திருக்க வேண்டும்?

“சிம்சோன் நீ ஒரு நசரேயன்; தேவனால் பிரத்தியேகமாக விசேஷப்படுத்தப்பட்டவன். சவரகன் கத்தி தலையில் படாமலும், திராட்சரசத்தை உனக்கு குடிக்கக் கொடாமலும், பிணத்தினால் தீட்டுப்படாமலும் இதுவரை நாங்கள் உன்னை காத்து வந்தோம். ஏனெனில் நீ தேவனுக்கென்று நசரேயனாய் இருக்கிறாய். நீ தீட்டுப்படலாகாது. இப்பொழுது நீ வளர்ந்து விவரம் தெரிந்தவனாய் இருக்கிறபடியினால், இனி நீ உன்னை பரிசுத்தமாய் காத்துக்கொள்ள பிரயாசமெடுக்க வேண்டும். இனிமேல் நீதான் பாதுகாப்பாய் இருந்து கொள்ள வேண்டும். கர்த்தருக்கு பிடிக்காததை மட்டுமல்ல நசரேய பிரதிஷ்டை முறியும்படி நீ எவ்விதத்திலும் நடந்து கொள்ள கூடாது என்பதில் மிக கவனமாய் இருக்க வேண்டும். உன் பிறப்பிற்கு ஒரு நோக்கமுண்டு. தேவன் ஏற்றவேளையில் அதற்காக உன்னை எடுத்துப் பயன்படுத்தும்படி விழிப்பாயிருந்து உன் பிரதிஷ்டையை காத்துக்கொள்ள வேண்டும். தேவன் வெறுக்கிற ஏழு புறஜாதிகளையும் நீயும் வெறுக்க வேண்டும். அவர்களோடு எவ்வித உடன்படிக்கையும் ஏற்படுத்தலாகாது. அவர்கள் நம் தேவனுக்கும் நமது கலாச்சாரத்திற்கும் விரோதமானவர்கள். விசேஷமாக இஸ்ரவேலரை பெலிஸ்தியர்களின் கையினின்று மீட்க வேண்டிய கடமை உனக்கு உண்டு. பெலிஸ்தியர்கள் நமக்கு விரோதிகள். அவர்களுக்கு இரக்கம் காட்டலாகாது. புறஜாதியாரில் பெண் எடுக்கவும் கூடாது; பெண் கொடுக்கவும் கூடாது என்று சொல்லி சொல்லி பெலிஸ்தியர் மீது வெறுப்பை ஊட்டி ஊட்டி வளர்த்திருந்தால், இப்பொழுது பெலிஸ்திய பெண்தான் வேண்டும் என்று சிம்சோன் கேட்டிருக்க மாட்டானல்லவா?! 

சிம்சோனின் பெற்றோரின் வளர்ப்புநிலை சரியில்லை என அறிகிறோமல்லவா?!

2.   கேள்வி வரைமுறையற்ற வளர்ப்பு முறை:


நியாயாதிபதிகள்: 14:8,9 – “… இதோ, சிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீக்கூட்டமும் தேனும் இருந்தது. அவன் அதைத் தன் கைகளில் எடுத்து, சாப்பிட்டுக் கொண்டே நடந்து, தன் தாய் தகப்பனிடத்தில் வந்து, அவர்களுக்கும் கொடுத்தான்; அவர்களும் சாப்பிட்டார்கள்” என  வாசிக்கிறோம்.

சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நன்றாக சாப்பிட வைத்து சரீர வளர்ச்சியில் வளர்த்திருப்பார்களே தவிர, உலகில் எப்படி வாழ வேண்டும்? சமுதாயத்தில் எப்படிப்பட்ட அணுகுமுறை இருக்க வேண்டும்? கர்த்தருக்கேற்ற பக்தி, பரிசுத்தத்தில் எப்படி விளங்க வேண்டும்? உறவுமுறைகள் எப்படி சீராக பேணிக்காத்தல்? போன்றவைகளை சொல்லி வளர்ப்பதில்லை. திருமணத்திற்கு பின்பு மகள் தன் கணவனிடத்திலும், மகன் தன் மனைவியினிடத்திலும் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டு வாழத்தெரியாமல் அவமானப்பட்டு நிந்தையோடு மருகிக்கொண்டிருப்பார்கள். ஆளும் வளரணும். அதற்கேற்ற அறிவும் வளரணும். அதற்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நல்லொழுக்கத்தில் வளர்க்க கவனமெடுக்க வேண்டும்.
சிம்சோன் தேனை தாய் தகப்பனுக்கு கொடுத்தானாம். அதை அவர்கள் வாங்கி சாப்பிட்டார்களாம். எந்த கேள்வியும் இல்லை. என்ன பெற்றோர் இவர்கள். “மகனே, தேன் உனக்கு எங்கு எப்படி கிடைத்தது?” என்று எந்தவொரு விசாரிப்பும் இல்லை. கொடுத்தான் தின்றார்கள். அவனை மட்டும் இவர்கள் சாப்பாட்டு ராமனாக வளர்க்கவில்லை. இவர்களும் இப்படித்தான் இருப்பார்கள்போல தெரிகிறது. எது எப்படி எந்த வழியாக வந்தாலும் சரி. நமக்கு அது லாபமாகவோ, இன்பமாகவோ இருந்தால் போதும் என்கிற மனநிலை இவர்களுக்கு இருந்து இருக்கிறது. வந்தது சரியான நேர்மையான வழியா? தவறான வழியா? என ஆராய நேரமில்லை. அவசியமுமில்லை. இது ஒரு தவறான போக்கு. முதிர்ச்சியான பெற்றோர் அல்ல எனக்காட்டுகிறது. ஒரேஒரு கேள்வி மட்டும் பெற்றோர் கேட்டிருந்தால் போதும் … சிம்சோன் திருந்தி நல்லவனாக மாற வாய்ப்பு ஒருவேளை இருந்திருக்கலாம். அவனது நசரேய உடன்படிக்கை உடையாமல் காக்கப்பட்டிருக்கலாம். கேட்க வேண்டிய கேள்விகளை பிள்ளைகளிடத்தில் கேட்க வேண்டிய நேரத்தில் கேட்க தயங்கினால் … அவர்களது ஒழுக்கநிலை எவ்வளவு சீரழியும் என்பதை பெற்றோர்கள் முதலில் அறிய வேண்டும்.

நசரேய விரதங்காக்கும் ஒருவன் மரித்த பிரேதத்தண்டையில் போகக்கூடாது. தொடவும் கூடாது. சிம்சோன் செத்த சிங்கத்தின் மார்புகூட்டுக்குள் உள்ள தேனை சுவைத்து. தன் பெற்றோருக்கும் தருகிறான். எப்படி இந்த பிரதிஷ்டையின் நோக்கம் தவறியது? கர்த்தருடைய தூதனானவர் சொன்ன கட்டளையின்படி சிம்சோனை வளர்க்கத்தவறிய பெற்றோரால் வந்த விளைவுதானே இது!?  

சிம்சோனுக்கு கர்த்தருடைய தூதனானவர் சொன்ன கட்டளையும் தெரியவில்லை; பெற்றோரைக்குறித்த பயமும் இல்லை. பெற்றோர் கண்டிப்புடன் வளர்த்திருந்தால், கர்த்தருடைய கட்டளைகளில் வளர்த்திருந்தால் பரிசுத்தமும், கற்பனையை பாதுகாக்கும் அறிவும் இருந்திருக்குமே! “பிரம்பும் கடிந்து கொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டு பண்ணுகிறான்” (நீதிமொழிகள்: 29:15) என வேதம் கூறவில்லையா? அதுதான் சிம்சோன் விஷயத்திலும் நடந்திருக்கிறது.

3.   பிள்ளைகள் பெற்றோருக்குள் நல்ல உறவு இல்லை:


நியாயாதிபதிகள்: 14:9 – “… அந்தத் தேனை சிங்கத்தின் உடலிலே எடுத்ததை அவர்களுக்கு அறிவிக்கவில்லை”.

பிள்ளைகள் பெற்றோர் உறவுநிலையானது மிகவும் பிணைப்புள்ளது. தொப்புள்கொடி உறவென்று உலகமும், இரத்தசம்பந்தமான உறவு என்று வேதமும் பெற்றோருக்கும் பிள்ளைக்கும் உள்ள உறவை பற்றி குறிப்பிடுகிறது. பெற்றோர் பிள்ளைகளுக்குள் முக்கியமான காரியங்களில் வெளிப்படைத்தன்மை தேவை. குறிப்பாக பிள்ளைகள் தங்களுக்குரியவைகளை பெற்றோர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒளிவுமறைவு இருக்கலாகாது. அது அவர்களுக்கு கண்ணியை வருவித்துவிடும். எந்த விஷயமானாலும், காரியமானாலும் முழுபாதுகாப்பும், உத்தரவாதமும், உண்மையுமான அன்பும் கண்டிப்பும் நிறைந்த நல்வழி நமது பெற்றோர் மட்டுமே நமக்கு காட்ட முடியும் என்பதை பிள்ளைகள் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட உறவுநிலை சிம்சோனுக்கு இல்லாததினால்தான் அவனது நசரேய விரதத்தின் உடன்படிக்கை செத்த ஈ யினால் அல்ல; செத்த சிங்கத்தினால் முறிந்து போனது. செத்த ஈ பரிமளத்தைலம் முழுவதையும் நாறப் பண்ணுமாம். அதுபோல செத்த சிங்கமும் செத்த ஈ க்கு சமம்தான் என்பதை அறிந்து கொள்ளுங்கள் என் சிறுபிள்ளைகளே. உயிரோடு இருக்கும்வரைதான் சிங்கம்; உயிர் போய் விட்டால், அது சிங்கமாயிருந்தாலும் பிரேதம்தான். பிள்ளைகள் பெற்றோர்களிடம் மனம்விட்டுப் பேசி பழக வேண்டும். பெற்றோர்களும் பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்கி விசாரிக்க வேண்டும். அவர்களது மனஐயங்களுக்கு நல்லாலோசனைகள் வழங்க முன்வர வேண்டும். இல்லாவிடின் பரிமளதைலம் போன்ற வாசனை வீசும் ஆவிக்குரிய வாழ்வு இவ்வுலகில் நாற்றமெடுக்கும் வாழ்வாக மாறிவிட சாத்தான் கிரியைகளை நடத்தி விடுவான். பிள்ளைகள்தான் நமது சொத்து. அவர்களது எதிர்கால நலனில் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களை கர்த்தருக்காக வளர்த்திட வேண்டிய பொறுப்பு பெற்றோர்களாகிய நம்மிடம்தான் கர்த்தர் கொடுத்திருக்கிறார். எனவே, பிள்ளைகளுடன் உறவுநிலையை சீராக்குங்கள். மனம்விட்டுப் பேச இடங் கொடுங்கள். உங்களிடம் அணுகமுடியாத தூரத்தில் அல்ல; பிரியத்துடன் எப்போதும் அணுகக்கூடியவர்களாக இருப்பது நலம்.

4.   நல்லொழுக்கங்களை கெடுக்கும் சம்பாஷணைகள்:


நியாயாதிபதிகள்: 14:12,13 – “சிம்சோன் அவர்களை நோக்கி: ஒரு விடுகதையை உங்களுக்குச் சொல்லுகிறேன்; அதை நீங்கள் விருந்தண்கிற ஏழுநாளைக்குள்ளே கண்டுபிடித்து எனக்கு விடுவித்தால், நான் உங்களுக்கு முப்பது துப்பட்டிகளையும், முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுப்பேன். அதை எனக்கு விடுவிக்காதேபோனால், நீங்கள் எனக்கு முப்பது துப்பட்டிகளையும், முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுக்க வேண்டும் என்றான்”.

1கொரிந்தியர்: 15:33 – “மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்” என வேதம் கூறுகின்ற வண்ணமாய் சிம்சோன் போன இடத்தில் வாயை வைத்துக் கொண்டு சும்மாயிராமல் கூட இருக்கும் வாலிபரை விடுகதை சொல்கிறேன் என்று சொல்லி வம்பிழுக்கிறான். ஒருவகையில் பார்த்தால் இது ஒரு பந்தயம் அல்லது சூதாட்டம்போல் தெரிகிறது. விடுகதையின் விடை சிம்சோனைத் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க வழிவகையில்லை. ஏனெனில், அது அவனுடைய சொந்த அனுபவத்திலிருந்து கேட்கப்பட்ட விடுகதை. அவனே விடுவித்தாலொழிய வேறுவழியில்லை. எனவே, அவர்கள் இதை விடுவிக்காமற்போனால் தனக்கு முப்பது துப்பட்டியும், முப்பது மாற்று வஸ்திரமும் ஆதாயம்தான். அதை உறுதி செய்து கொண்டே விடுகதையை போடுகிறான். (என்ன செய்வது வரப்போகிறவள் சிம்சோனுக்கு உண்மையாக இல்லையே!).

போனது எதற்கு? காரியம் முக்கியமா? வீரியம் முக்கியமா? போன காரியத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதில் மட்டுமே சிம்சோன் கவனமாயிருந்திருக்க வேண்டும். அவனோ, வாலிபரோடு தேவையற்ற சம்பாஷணை வைத்ததினால் வீண் வம்பு மற்றும் பிரச்சினைகள். ஆகாத சம்பாஷணையினால் அழிவுதான் மீதம்.

“வம்பும் வாதும் ஒரு நசரேயனுக்கு தேவையற்றது; நீ கர்த்தருக்காக தெரிந்து கொள்ளப்பட்டவன்; நோக்கம் தவறவிடக்கூடாது; பிறரோடு பழகும்முறை, பேசும்விதம் எப்படி இருக்க வேண்டும்” என பெற்றோர் நன்கு வாழ்க்கைமுறைகளை கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அதில் அவர்கள் தவறிவிட்டனர்.

5.   ஏழாம் கட்டளையை மீறினான்:


நியாயாதிபதிகள்: 16:1 – “பின்பு, சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான்”.

ஒவ்வொரு இஸ்ரவேலனும் பத்து கட்டளையை பாராமல் மனனம் செய்திருப்பான். தன் வாழ்வில் அனுதினமும் கடைபிடிப்பதில் மிக கவனமாயிருப்பான். எல்லா எபிரெய பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு இதை போதிப்பதில் மிகவும் அக்கறையும், கவனமும் செலுத்துவார்கள். ஒவ்வொரு இஸ்ரவேல் வம்சத்தானும் மோசேயின் பத்து கட்டளைகளையும் நன்கு அறிந்திருப்பான். அதிலும் சிம்சோன் நசரேயன். அதிக விரதத்துவனாக இருக்க வேண்டும். ஆனால் அவன் செய்தது என்ன? அவன் வாழ்வில் ஏற்பட்ட ஏமாற்றங்களுக்கு தீர்வு வேசி வீட்டிலா கிடைக்கும்? எப்படிப்பட்ட போதனைகளில் இவன் வளர்ந்திருப்பான்? இவன் பெற்றோர் சிறுவயதிலிருந்து என்ன சொல்லி வளர்த்தார்களோ தெரியவில்லை. மொத்தத்தில் வளர்ப்பும் சரி … வளர்ந்த விதமும் சரி… எதுவுமே சரியில்லை என தெளிவாக தெரிகிறது.

6.   இரகசியங்காப்பதில் தவறினான்:


நீதிமொழிகள்: 11:12,13 – “… புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான். புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்”

நீதிமொழிகள்: 25:9 – “நீ உன் அயலானோடே மாத்திரம் உன் வியாஜ்யத்தைக் குறித்து வழக்காடு, மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே”

கர்த்தருடையவர்கள் இரகசியங்களை காப்பதில் கவனமாயிருப்பார்கள். ஏனெனில் அவர்கள் மிகுந்த பொறுப்புடையவர்கள். கர்த்தருக்கு பயந்தவர்களிடத்தில் தேவனுடைய இரகசியம் இருக்கிறது என்று வேதம் சொல்கிறது. தேவனுடைய ராஜ்யத்தைக் கட்டுகிற, கிரியை நடப்பிக்கிற மாபெரும் திட்டம், செயல்பாடுகளை தேவன் தருகிறபடியால்… அதற்குரிய நன்மைகளையும், பலத்தையும் தருவதினால் அதின் எண்ணிக்கையின் தொகையை காக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அவர்களுக்கு உண்டு. அவர்களை நம்பி ஒரு கூட்ட தேவஜனம் இருக்கிறது. ஊழியம் இருக்கிறது. தொடர்ந்து அந்த பயணத்தை செய்ய தடையேதும் வரா வண்ணம் தேவனுடைய இரகசியசெயல்கள் காக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால், இதை சிலர் அலட்சியப்படுத்தினார்கள். அதன் விளைவுகள்? படுமோசமானவையாக மாறிப்போயின.

வேதத்திலே இரகசியங் காக்கத்தவறியவர்கள்: (எசேக்கியா ராஜாவும் சிம்சோனும்)

அ)        2இராஜாக்கள்: 20:13 – “அக்காலத்திலே பலாதானின் குமாரனாகிய பெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா எசேக்கியா வியாதிப்பட்டிருக்கிறதைக் கேட்டு, அவனிடத்துக்கு நிருபங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான். எசேக்கியா அவர்களை அங்கிகரித்து, பின்பு அவர்களுக்குத் தன் பொக்கிஷசாலை அனைத்தையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும் தன் பொக்கிஷசாலைகளிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான்; தன் அரமனையிலும் தன் ராஜ்யத்தில் எங்கும் எசேக்கியா அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றுமில்லை”.

அதன் விளைவு?

2இராஜாக்கள்: 20:17,18 – “இதோ நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது பிதாக்கள் இந்நாள் வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டு போகப்படும். நீர் பெறப்போகிற உமது சந்தானமாகிய உமது குமாரர்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமணையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்”

ஆ)                  நியாயாதிபதிகள்: 16:16,17 – “இப்படி அவனைத் தினம்தினம் தன் வார்த்தைகளினாலே நெருக்கி அலட்டிக் கொண்டிருக்கிறதினால், சாகத்தக்கதாய் அவன் ஆத்துமா விசனப்பட்டு, தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: … அவளிடத்தில் சொன்னான்”.

அதன் விளைவு?

நியாயாதிபதிகள்: 16:21 – “பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக் கொண்டிருக்க வைத்தார்கள்”.

நசரேய விரதம் காக்கப்பட முதலில் பெற்றோரும், பின்பு நசரேய விரதம் காப்பவனும் பொறுப்பாவார்கள். நசரேய விரதம் பாதியில் வருவதல்ல; பிறப்பிலிருந்தே அது ஆரம்பமாவதால் முதலில் பெற்றோர் அதைக் காத்து நடக்கவும், அதின் வழியில் போதிக்கவும் கடமைப்பட்டுள்ளனர். அதை சிறுபிராயத்திலிருந்தே அக்குழந்தைக்கு அறிவுறுத்தவும், போதிக்கப்படவும், வழிநடத்தவும் வேண்டிய முக்கிய பொறுப்பு பெற்றோரைச் சார்ந்தது. இம்முறை இவ்விருவர் (சாமுவேல், சிம்சோன்) விஷயத்திலும் சரிவர பின்பற்றப்பட்டதா? என்பதே இந்த ஆய்வுக் கட்டுரையின் ஆரம்ப நோக்கம். இதன் அடிப்படையில்தான் நாம் தியானித்தோம்.

எனவே, பொருத்தனையின் குமாரனாகிய சாமுவேலின் பெற்றோர், எல்க்கானா – அன்னாள் அதை சரிவர பின்பற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகள் சிறிதேனும் கூட – சிம்சோனின் பெற்றோராகிய மனோவாவும் அவன் மனைவியும் சரிவர எடுத்துக் கொள்ளவில்லை என இந்த ஆய்வின் மூலம் அறிய முடிகிறது.

ஒரு பெற்றோர் எப்படி குழந்தையை ஆவிக்குரிய வகையில் வளர்க்க வேண்டும்? என்பதற்கு எல்க்கானா – அன்னாள் தம்பதிகளும், ஒரு பெற்றோர் எப்படி குழந்தையை ஆவிக்குரிய வகையில் வளர்க்கக் கூடாது? என்பதற்கு மனோவா தம்பதியினரும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டுகள்.

நாம் நம் பிள்ளைகளை எப்படி வளர்க்கப்போகிறோம்? இன்றே ஓர் தீர்மானம் எடுப்போம். ஏசாயா: 8:18 – “இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும், அற்புதங்களாகவும் இருக்கிறோம்”. இருக்க பிரயாசமெடுப்போமாக! ஆமென்! அல்லேலூயா!

கர்த்தர் உங்களனைவரையும் ஆசீர்வதிப்பாராக!