'NESARIN THOTTAM' AG CHURCH

இயேசுவே ஆண்டவர் "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொருநாமம் கட்டளையிடப்படவும் இல்லை" (அப்:4:12)
Blogger Widgets

Translate

புதன், 23 ஆகஸ்ட், 2017

கர்த்தரோடு ஒரு நெருக்கமான உறவு

Image result for Lk: 10:40

கர்த்தரோடு ஒரு நெருக்கமான உறவு

(செய்தியாளர்: பாஸ்டர்.பிலிப் வார்ட் – ஆஸ்திரேலியா)

லூக்கா: 10:40-42 – மார்த்தாள் எப்பொழுதும் ஏதாவது ஒரு வேலைசெய்து கொண்டே இருக்கும் சுறுசுறுப்புள்ள ஒரு பெண். உலக வேலையில் அதிக நாட்டம் கொண்டவள். அவளால் ஒரு கணப்பொழுதாகிலும் சும்மாயிருக்க இயலாது. எப்பொழுதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டே இருப்பவள். இப்படிப்பட்டவர்களைக் காணும்போது அனைத்து தரப்பு மக்களும் இவர்களை விரும்புவார்கள்.

ஆனால், ஒரு தேவனுடைய பிள்ளையோ மற்றும் ஒரு போதகரோ எப்போதும் பிஸியாக (BUSY) இருக்கக்கூடாது. தேவனோடு உறவாட வேண்டும். அவரோடு உறவாட நேரம் ஒதுக்க வேண்டும். நம் வாழ்வில் எப்போதும் தேவனே நமக்கு முக்கியம். எப்பொழுது பார்த்தாலும் வேலை வேலை, ஊழியம் ஊழியம் என்றிருக்கக்கூடாது. கர்த்தரோடு உறவாடுதல் இவைகளைப் பார்க்கிலும் அதி முக்கியமானது என்பதனை நாம் உணர வேண்டியது மிக அவசியமான ஒன்றாகும்.

மாற்கு: 3:13,14 – “பின்பு, அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார்; அவர்கள் அவரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்து கொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம் பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும்,”

தேவன் 12 பேரைத் தமக்கென தெரிந்து கொண்டு, தம்மோடு இருக்க வேண்டும் என விரும்பினார். தேவனிடத்தில் வருவோர் பெரும்பாலும் “கொடும், தாரும்” என்பவர்களே அதிகம். ஆனால், தேவன் விரும்புவதோ, தம்மிடம் வருவோர் அனைவரும் தம்மோடு இருக்க வேண்டும் என்பதைத்தான்.

தேவனுடைய உள்ளத்தை துக்கப்படுத்துவது எது? சந்தோஷப்படுத்துவது எது? என்பதை யார் ஒருவர்? எப்படி அறிய முடியும்? தேவனோடு நேரத்தை செலவிடும் ஒருவரால் மட்டுமே அறிய முடியும்.

கர்த்தருடைய இதயதுடிப்பை அறிவது எப்படி?

கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து, நேரத்தை செலவிட்டால் மட்டுமே அவரது இதய துடிப்பை அறிந்துகொள்ள இயலும்.

அ) வேதத்தை கருத்தாய் வாசித்து தியானிக்கும்போது
ஆ) கருத்தாய் ஜெபிக்கும்போது
இ) உபவாசித்து, மன்றாடி, அவருடைய முகத்தை தேடும்போது

ஒரு போதகர் அல்லது ஒரு விசுவாசி யாராயிருப்பினும், தேவனுடைய முகத்தைத் தேடும்பொழுது, தேடித் தன்னைத் தாழ்த்தி ஜெபிக்கும்போது,  அப்படிப்பட்டவர்களுக்கு அவர் வல்லமையாய் வெளிப்படுவார். 

அப்படிப்பட்டவர்களின் ஊழியத்தில், வாழ்வில், அவர்களது கிரியைகளில் தேவனுடைய வல்லமை வெளியரங்கமாய் வெளிப்படச் செய்வார். அதை அனைவரின் கண்களும் காணும்படிச் செய்வார்.

தேவனோடு நேரத்தைச் செலவழித்தால் …

பழைய ஏற்பாட்டில், சாலமோனின் தேவாலயத்தில் மற்றும் அரமணைகளில் பொக்கிஷ அறைகள் என்று இருந்தது. அதுபோல பரலோக தேவனுடைய பொக்கிஷ அறைகளில், பொக்கிஷங்கள், வரங்கள், கனிகள் நிறைந்து காணப்படுகிறது. நீங்கள் தேவனோடு நேரத்தைச் செலவழித்தால், அவர் உங்களை அந்த அறைகளுக்குள்ளே அழைத்துச் செல்வார்.

சங்கீதம்: 63:1 – “தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்…”

“அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்” – என்கிற வார்த்தை எதைக் குறிக்கிறது? “தேவனே முக்கியம்; தேவன்தான் முக்கியம்; ஒவ்வொருநாளும்” – என்பதையே வலியுறுத்துகிறது. “என் வாழ்வில் தேவனுக்குத்தான் முதலிடம்” என்பதையல்லவா நமக்கு வேதம் வலியுறுத்துகிறது.

தென்கொரிய தேசத்தில் சீயோல் பட்டணத்தில் ஊழியம் செய்து வருகிற பாஸ்டர்.பால் யாங்கிச் சோ என்ற போதகர், 8 லட்சம் விசுவாசிகளைக் கொண்ட சபைக்கு தலைமைப் போதகராயிருந்த போதும், அவர் தம்மை பிசியாகக் காட்டிக் கொள்ளாமல், தேவனோடு நேரம் செலவழிக்க தன்னை அனுதினமும் அர்ப்பணித்திருக்கிறாரே!

நமதாண்டவர் இயேசுவைச் சுற்றிலும் எப்பொழுதும் ஜனங்கள் அவரை நெருக்கிக் கொண்டுதானே இருந்தார்கள். ஆகிலும், அவர் ஜனங்களை விட்டு விலகி பிதாவோடு தனித்திருக்க தம்மை தனிப்படுத்திக் கொண்டாரே!

பிதாவோடு உறவாட இயேசுவும், தேவனோடு உறவாட பால் யாங்கிச் சோவும் நெருக்கங்கள் நடுவே, வேலைபளுவின் மத்தியில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டார்களே!

இன்றைக்கு அநேகம்பேர் தேவனுக்கு நேரம் செலவழிப்பதில் குறைவுபட்டிருக்கக் காரணம் என்ன? மார்த்தாளைப்போல உலகவேலைகளில் மனதைச் செலுத்தி, தங்களை எப்பொழுதும் பிஸியாகவும், பரபரப்பாகவும் வைத்துக் கொள்வதினால்தானே. இதனால்தானே ஆண்டவர் இயேசு மார்த்தாளை கடிந்து கொண்டார்? வாழ்வில் எது முக்கியம்? எது முக்கியமற்றது என்பதை நாம் இனங் காண வேண்டாமா? அவைகளை கண்டறிந்து களைய வேண்டுமல்லவா?

எபேசியர்: 1:17 – “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்து கொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருள வேண்டுமென…”

அவரோடுகூட நேரத்தை நாம் செலவிட நமக்கு “ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவி” நமக்குத் தேவையென உணர்ந்து ஜெபத்தில் அவைகளை நாம் கேட்போமாக.

நமது முதலிடம் தேவனுக்கா? ஜனத்திற்கா?
இயேசுகிறிஸ்துவின் சிந்தை நமக்கு வேண்டும். இயேசுகிறிஸ்து, பிதாவோடு நேரத்தை தனியாக செலவிட்டார். நாமும் அதுபோல தேவனோடு நேரத்தை செலவிட வேண்டும். மனதை அலைபாய விடக்கூடாது. நித்திரை வரும்போலத் தெரிந்தால், நடந்து கொண்டு, கைகளை அசைத்து, உயர்த்தி, தட்டி ஜெபிக்கலாம். உறவாடலாம்.
யோவான்: 5:19 – “… பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்ய மாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்”.

அவர் செய்வதை இயேசு காண்கிறார். எப்படி? இயேசு கிறிஸ்து, பிதாவோடு நேரத்தை செலவிட்டதினால் காண்கிறார்.

யோவான்: 5:20 – “பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்”.

அன்பாயிருந்து நேசிக்கிறார் – அதனால் காண்பிக்கிறார். இயேசுவுக்கு மட்டுமல்ல. உங்களையும் நேசிக்கிறார். இதைவிட பெரிய காரியங்களை காண்பிக்கவும், பெரிதான கிரியைகளை உங்களைக் கொண்டு செய்யவும் அவர் விரும்புகிறார். அதற்கு நீங்கள் தேவனோடு நெருக்கமான ஒரு உறவில் இருக்க வேண்டும்.

பிலிப்பியர்: 3:10 – “இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,”

நான் அவரை அறியட்டும்; அவரோடு நெருக்கமாயிருந்து அவரை அறிய வேண்டும் என்று தனது விருப்பத்தை அப்.பவுல் வெளிப்படுத்துகிறார்.
வெளிப்படுத்தல்: 3:20 – “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்”

“சத்தம் கேட்டு கதவைத் திற” – எதற்கு? அவரோடு நேரத்தை செலவிட, ஐக்கியப்பட…

உன்னதப்பாட்டு: 1:2 – “அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக; உமது நேசம் திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது”
உன்னதப்பாட்டு புஸ்தகமானது – சபைக்கும் இயேசுகிறிஸ்துவுக்கும் உள்ள நெருக்கமான உறவைக் குறித்துக் கூறுகிறது.

உன்னதப்பாட்டு: 1:4 – “என்னை இழுத்துக்கொள்ளும்…” – இது இன்னொரு மட்டத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறது. இன்னொரு நிலைக்கு நாம் கடந்து செல்ல வேண்டும் என்பதைக் காட்டுகிறது. உறவுநிலையில் இன்னொரு நிலை – இழுத்துக் கொள்ளுதல்.

உலகம் மாமிசம் பிசாசு நம்மை இழுக்கப் பார்க்கும் நிலையில்… என் தேவனே, நீர் என்னை இழுத்துக் கொள்ளும். உம் பின்னால் நாங்கள் ஓடி வருவோம். என்னை இழுத்துக்கொள்ளும் முழுஉரிமை உமக்கு மட்டுமே உண்டு – என சொல்வோமாக. எனவே, தேவனோடுள்ள உறவு மிக முக்கியம்.

“பிஸியாக அல்ல; இயேசுவின் மேல் பசியாக இரு”

சங்கீதம்: 42:1,2 – “மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?”

மான் தாகம் தணிக்க நீரோடைக்கு வரும். தாகம் தணிக்க வந்தால், சிங்கத்தினிடம் இரையாக நேரிடும். ஏனென்றால், இரையைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீரோடை அருகில் பதிவிருந்தால் போதும்; இரை தானாக தேடி வரும். உயிரா? தண்ணீரா? என்ற கேள்வி வரும்போது… மான் தன் உயிரைவிட, தண்ணீரின் தாகம்தான் அதற்கு பெரிதாக இருக்கும். அதேசமயம், தான் சிங்கத்தினிடம் இரையாகவிடக்கூடாது என்பதில் கவனமாயிருக்கும். எப்படி?

தாகம் தணிக்க நீரோடைக்கு வரும்போது மானின் வாசனையை அறிந்து சிங்கம் வந்துவிடும். அதனிடமிருந்து மான் தப்புவதற்கு, கழுத்தளவு தண்ணீரில் இறங்கி, தாகம் தணித்துக் கொண்டு, சிங்கம் அறிந்து வரும்முன், கரையேறி தப்பிச் சென்றுவிடும். சிங்கத்தினிடமிருந்து தப்ப, மான் நீரினால் மூழ்க வேண்டியது அவசியம்.

அதுபோல, நமது மாம்சம் மறைய பரிசுத்தாவியானவர் நமக்குத் தேவை. அவரது அபிஷேகம் தேவை. நிறைவு தேவை. ஆவியானவருக்குள் நிறைவை பெறபெற நமது மாம்ச குணங்கள் மறைந்துபோகும். ஆவியானவரின் நெருக்கமான உறவு நமக்குத் தேவை.

உன்னதப்பாட்டு: 1:4 – “…. திராட்சரசத்தைப்பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்…”

திராட்சப்பழங்களை சேகரித்து ஆலையிலே கொண்டு வந்து, அதை மிதித்து, கசக்கிப்பிழிந்து, தோலையும், காம்பையும், விதைகளையும், சதைகளையும் நீக்கி, சாறு பிழிந்து இரசம் எடுப்பதைப்போல… நம்மை, தேவனாகிய கர்த்தர் ஆலையின் தொட்டியில் வைத்து கசக்கிபிழிந்து, தேவையற்ற மாம்ச குணங்களை நீக்கி, பரிசுத்தமான இரசமாக தமக்கு மாற்றிக் கொள்கிறார்.

நமது முக்கியத்துவம் எது? ஊழியமா? மக்களா? தேவனா?

நமது முக்கியத்துவம் – ஊழியமுமல்ல; மக்களும் அல்ல; தேவனே நமது முக்கியம். இதற்கு உதாரணமாக மோசேயின் வாழ்வை எடுத்துக் கொள்வோம்.

யாத்திராகமம்: 19:12,24 – மலையைச் சுற்றிலும் எல்லையைக் குறித்து ஒரு வேலி போடுகிறார். மலையைத் தொட்டால் மரணம். ஏன்? இஸ்ரவேலர் வணங்காக்கழுத்துள்ள ஜனம் என்பதால்.

தேவன் நான்கு முறை அழைக்கிறார்

1.   நீ மட்டும் வா – மோசேயை மட்டும் அழைக்கிறார் – யாத்திராகமம்: 19:20
2.   70+4 – 74 பேரை கூட்டி வா – யாத்திராகமம்: 24:1,9
3.   யோசுவாவை அழைத்து வா – யாத்திராகமம்: 33:11
4.   ஆரோனை அழைத்து வா – யாத்திராகமம்: 24:1

மலையைத் தொட்டால் மரணம். இப்படியிருக்க, எப்படி அதைத்தாண்டி வந்தார்கள்? வேலியை தாண்ட எது அவர்களை தகுதிப்படுத்தியது?
1.   யாத்திராகமம்: 24:4 – பலிபீடம் அவர்களை காத்தது. தகுதி தந்தது. பலிபீடம் – இரத்தம் பரிகாரமாக இருந்தது. இரத்தமில்லாமல் அணுக முடியாது. எனவே, பலபீடத்தை முதலாவது கட்டு. இயேசுகிறிஸ்துவின் இரத்தம் நெருங்கச் செய்யும்.

2.   யோசுவா, நாதாப், அபியு, மூப்பர்கள் வாஞ்சித்தனர். அடிவாரத்தோடு நெருக்கம் முடிந்துபோனது. ஆனால் மலைக்குச் சென்றவன் மோசே மட்டுமே. மோசே எல்லாரையும் தாண்டிச் செல்கிறான் (யாத்: 24:2). அப்படியானால் எது அவனை கொண்டு போனது? அவனுடைய சாந்த குணமும், மனத்தாழ்மையுமே.

ஆரோன்: யாத்திராகமம்: 19:24 – “… நீயும் ஆரோனும் கூடி ஏறி வாருங்கள்” என்றார். ஆனால், மோசேயோடு ஆரோன் போகவில்லை. அவன் மலைக்கு கீழே மக்களோடு தங்கி விட்டான். வாலிபன் யோசுவா மலையில் தங்கினான். வயோதிக மோசே மலையில் ஏறினான். நடுத்தர வயதுள்ள ஆரோன் கீழேயே தங்கி விட்டான்.

யோசுவா – தேவனோடு தங்கி, வார்த்தைகளைப் பெற்று, மக்களிடம் கொண்டு போனான். தேவன் அவனோடு இருந்தார்.

ஆரோன் – மக்களோடு தங்கி, வார்த்தைகளை வாங்கி மக்களிடம் கொண்டு போனான். தேவன் அவனோடு இல்லை. (யாத்: 24:14)
விளைவு?

பொன் கன்றுகுட்டி வந்தது. தேவன் சொன்னதையல்ல; மக்கள் சொல்வதை கேட்டவன் ஆரோன். ஜனங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பவன் ஆவிக்குரிய தலைவனல்ல. கர்த்தர் சொல்லக் கேட்டு நடப்பவனே தேவ ஊழியன். ஜனங்கள் சொல்வதைக் கேட்டதினால்தான் கன்றுக்குட்டி வந்தது. தொடர்ந்து கன்றுக்குட்டியின் ஆவி வந்தது.

புதிய ஏற்பாட்டில் ஒரு உதாரணம்:

யோவான்: 6:60 – சீஷர்களில் அநேகர், “கடினமான உபதேசம்; யார் இதைக் கேட்பார்கள் என்று சொல்லி விலகி போனார்கள். ஆனால், 12 சீஷர்கள் மட்டும் எங்கே போவது? நித்திய ஜீவவார்த்தைகள் உம்மிடம் உண்டே என்று சொல்லி நிலைத்திருந்தார்கள்.

இயேசுவோடு எவ்விடமும் சென்றவர்கள் மூன்று பேர் – பேதுரு, யாக்கோபு, யோவான். பழைய ஏற்பாட்டில் சொன்னால் – யோசுவா. இவர்கள் இயேசுவுக்கு நெருக்கமாய் இருந்தனர். எது இவர்களை தகுதிபடுத்தியது? நெருக்கமான உறவுதான் காரணம்.

நெருக்கமாய் இருப்பவன் காட்டிக் கொடுக்க மாட்டான். உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான் என்று இயேசு சொன்னபோது … யாரும் சரியான மறுஉத்தரவு தரவில்லை. யார் மறுஉத்தரவு சரியாக கொடுத்தான்? அவரை நெருங்கி இருந்த யோவான்தானே! “யார் அவன்?” என்றானே! ஏனென்றால், இயேசுவின் இதயத்துடிப்பை உணர்ந்தவன், கேட்டவன். மார்பிலே சாய்ந்து இருந்தவன்.

இயேசுகிறிஸ்துவின் இதய துடிப்பை நாம் கேட்கிறோமா? நம்மைப்பற்றிய இயேசுவின் இதயத்துடிப்பு என்ன?

நெருக்கமான உறவின் வலிமை

“உறவு இல்லையென்றால் பிள்ளைபேறு இல்லை”
“கணவன் மனைவி உறவு இல்லையென்றால் பிள்ளைபேறு இல்லை”
தேவனும் போதகரும் நெருங்கிய உறவு பேணப்பட வேண்டும்; தேவனும் விசுவாசியும் நெருங்கிய உறவில் வலுப்பட வேண்டும். தூரத்திலிருந்து ஆராதிக்காதே; நெருங்கி வா. மலையின் மேல் போக தாமதிக்காதே. தேவன் நம்மை பயன்படுத்த விரும்புகிறார். எனவே, அவரோடு நெருக்கமான உறவு ஏற்படுத்திக்கொள். ஆத்துமாக்களின் எண்ணிக்கை சபையில் பெருகும். பெருக்கமடைய தேவனோடு ஒரு நெருக்கமான உறவு தேவை என்பதை மறந்து விடாதே. ஆசீர்வாத பெருக்கம் உனக்கு உண்டாயிருக்க தேவனோடு உறவாடு. ஆமென்! அல்லேலூயா!.

செய்தியாளர்: பாஸ்டர்.பிலிப் வார்ட் - ஆஸ்திரேலியா (22.08.2017 சேலம் ஊழியர் கருத்தரங்கில்)

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

பத்து வெள்ளிக்காசு

Image result for Lk: 15:8
பத்து வெள்ளிக்காசு  The Ten Silver Coins                       

திறவுகோல் வசனம்: லூக்கா:15:8 – “அன்றியும் ஒரு ஸ்தீரி பத்து வெள்ளிக் காசை உடையவளாயிருந்து,அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி,வீட்டைப் பெருக்கி,அதை கண்டுபிடிக்கிற வரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ?”

இவள் யார்?


ஒரு ஸ்திரீ – ஒரு பெண். சிறுமி அல்ல; புருஷன் / ஸ்திரீ – என்பது போல….  

  அதாவது – பூரண / ஸ்திரமுள்ள / முதிர்ந்த (அறிவில்) ஸ்திரீ. ஆவிக்குரிய வாழ்வில் பொறுப்புள்ளவள். தேவன் தந்தவைகளில் பொறுப்புள்ளவள். இழப்பை சரிசெய்பவள் -  ஈடு கட்டுபவள். எப்படி?

அவளிடம் இருந்தது – 10 வெள்ளிக்காசு  
                                            
 காணாமல் போனது – 1 வெள்ளிக்காசு

காணாமல் போனதை கண்டுபிடிக்க பல வழிகள் உண்டு. ஆனால்… அவள் தெரிந்துகொண்டது 

1.   கொளுத்தப்பட்ட விளக்கு       2. வீட்டைப் பெருக்கும் விளக்குமாறு

அவளது மனவுறுதி: “அதைத் தேடி கண்டுபிடித்தே தீர வேண்டும்” – என்ற ஜாக்கிரதை உணர்வு. ‘போனது ஒன்றுதானே’ என்ற நிர்விசாரம் இல்லை. பத்தில் ஒன்றுகூட குறைய கூடாது.

10 வெள்ளிக்காசு எதற்கு ஒப்பானது?

அக்கால இஸ்ரேலிய வழக்கப்படி,ஒரு யூதப்பெண் – தனது திருமண வாழ்விற்கு சீதனமாக, அவள் கைப்பட சம்பாதித்து,10 வெள்ளிக்காசை சேர்த்து, நூலில் கோர்த்து வைக்கவேண்டும். அதை திருமணத்தன்று நெற்றியில் தெரிய தலையில் கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும். அது அப்பெண்ணுடைய ஆவிக்குரிய மற்றும் பூமிக்குரிய பொறுப்புணர்வை எடுத்துக் காட்டும். பத்தில் ஒன்று குறைந்தாலும் அவளது பொறுப்பின்மையை அது வெளிப்படுத்திவிடும்.

10 வெள்ளிக்காசு – ஒவ்வொரு வெள்ளிக் காசும், ஒவ்வொரு ஆவிக்குரிய பொறுப்புள்ள சுபாவங்களை குறிக்கும்                                                               
 விளக்கு - வேதம்  
                                                                      
 வீடு – சரீரமாகிய வீடு (ஆவி,ஆத்துமா,சரீரம்)                                          

 பெருக்கி – தன்னைத் தானே சோதித்தறிதல் – (செப்பனியா:2:2)

பத்து வெள்ளிக்காசில் – ஒவ்வொரு வெள்ளிக்காசுக்கும் ஒவ்வொரு சுபாவம்/ பொறுப்பு உண்டு. அவை என்னென்ன என்பதை விளக்கைக் கொளுத்தி (வேதத்தை திறந்து) பார்த்தால்தான் நாம் கண்டுகொள்ள இயலும்.

    வேதம் காட்டும் இவ்வகையான சுபாவங்கள் நம்மில் காணப்படவேண்டும். அதில் ஒன்றுகூட குறையாத வண்ணம் பாதுகாக்கப்படவேண்டும். ஒருவேளை இந்த தியான நேரத்தில் 10ல் ஏதாகிலும் குறையாகக் கண்டால்… அவை நம்மில் நிறைவேற அர்ப்பணிப்போம்.

    இது ஒரு ஸ்திரீக்கு மட்டுமல்ல. புருஷனுக்கும் உரியது. கிறிஸ்துவுக்குள் ஆண் என்றும் இல்லை; பெண்ணென்றும் இல்லை; இவள் ஒரு கன்னிகை என்றால்… நாமும் மணவாளன் இயேசுவுக்கு ஒரு கன்னிகை தான் – என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

பரலோகத்தில் சேர்வதற்கான 10 வகையான நாகரீகம் / பண்பாடு / பின்னனியம் தெரிந்திருக்க வேண்டும்.

பத்து வகையான குணங்கள் / சுபாவங்கள்

1.   ஆதி:20:16 – முகத்தை மூடும் முக்காட்டுக்கு ஒன்று

      பெண்கள் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது தன்னை தாழ்த்துவதற்கு அடையாளமாக தன் முகத்துக்கு முக்காடிட வேண்டும்

1கொரி:11:8-10 – ஸ்திரீ புருஷனிலிருந்து தோன்றினவள்.  

இதை சாராள் மீறினதால் அபிமெலேக்கினால் கடிந்துகொள்ளப்பட்டாள்.

2.   ஆதி:33:19 – அந்நிய நுகத்தில் பிணைக்கப்படாதிருக்க ஒன்று

      யாக்கோபு புறஜாதிகளிடம் நிலம் வாங்கி, அவர்கள் நடுவில் குடியிருந்ததினால், அவன் தன் மகளை இழக்க நேரிட்டது. தன் ஒரே மகள் அந்நியனால் தீட்டுப்படுத்தப்பட்டாள்.

2கொரி:6:14 – அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக.

3.   ஆதி:37:28 – நமக்கு உரியவர்களையும் உரிமைகளையும் விடாதிருக்க ஒன்று

      யோசேப்பை அண்ணன்மார்கள் இஸ்மவேலரிடத்தில் 20 வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டு, தங்கள் தகப்பனிடத்தில் கொடிய மிருகம் கொன்றுப் போட்டதாக கூறினார்கள். தங்களுக்கு உரியவனை அந்நியனிடத்தில் விற்றார்கள்.

நியாயா:1:15 – அக்சாள் திருமணமாகி போகும்போது தன் தகப்பனிடத்தில்,“நீர் எனக்கு வறட்சியான நிலத்தை தந்தீர். இப்போது எனக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்கு தரவேண்டும்” என்று தனக்கு உரியவைகளை கேட்டு பெற்றுக்கொண்டாள். தன் கணவர் மாமனாரிடத்தில் கேட்பது சரியாக இருக்காது; தன் தகப்பனிடத்தில் தானே தன் உரிமைகளை மற்றும் தகப்பன் வீட்டு சீதனங்களை கேட்டுப் பெறுவதே முறையானது என்பதை அறிந்தவள் அக்சாள். அதுதான் சரியானதும் கூட.

4.   நியாயா:16:5 – கணவனின் பலம்/பலவீனம் வெளிப்படுத்தாமலிருக்க ஒன்று

  தெலீலாள் சிம்சோனின் பலத்தை அவனுடைய சத்துருக்களுக்கு வெளிப்படுத்தினாள். தன் சொந்த குடும்பத்தில் உள்ளவர்கள், உடன் பிறந்த தம்பி தங்கை, அண்ணன் அக்காள், அப்பா அம்மா, மற்றும் நட்புகள் என எப்படிப்பட்ட உறவுகளாயிருப்பினும் பகிர்ந்து கொள்வது நல்ல செயல் அல்ல. தன் துணையின் பலத்திற்கு தேவனுக்கு நன்றி சொல்லவும், பலவீனத்திற்காக தேவனிடம் ஜெபிக்கவும் வேண்டும். இது நலம் பயக்கும்.

5.   நியா:17:1-4 – கர்த்தர் தரும் பணத்தை விக்கிரகங்களுக்கு கொடாமலிருக்க ஒன்று.

1இராஜா:15:18,19 – தன்னை காத்துக்கொள்ள எதிரிகளுக்கு கூலி கொடாமலிருக்கஒன்று.

1சாமு:9:8 – “அந்த வேலைக்காரன் பின்னும் சவுலைப் பார்த்து: இதோ என் கையில் இன்னும் கால்சேக்கல் வெள்ளியிருக்கிறது; தேவனுடைய மனுஷன் நமக்கு நம்முடைய வழியை அறிவிக்கும்படிக்கு, அதை அவருக்குக் கொடுப்பேன் என்றான்.”

  எஜமானிடத்தில் வெள்ளி இல்லை; வேலைக்காரனிடத்தில் சேமிப்பு இருந்தது. சவுல் தனக்காக (தின்பதற்காக) மீதமின்றி செலவழித்தான்; வேலைக்காரன் தேவமனுஷனுக்கு கொடுப்பதற்கென்று மீதம் வைத்திருந்தான்.
                 1இராஜா:7:51 – கர்த்தருக்கு கொடுக்க ஒன்று
தாவீது நேர்ந்து கொடுத்தச் சென்ற வெள்ளியை அவனது குமாரன் சாலமோன் கர்த்தருக்கென்று கொடுத்தான்.

6.   1இராஜா:10:29 – புறஜாதியாரிடம் எதையும் இலவசமாய் வாங்காமலிருக்க ஒன்று

ஆதி:23:9 – ஆபிரகாம் மக்பேலா குகையை 400 சேக்கல் நிறைவெள்ளியைக் கொடுத்து, ஏத்தின் புத்திரரிடத்தில் வாங்கினான்.

யோசு:24:32 – யோசேப்பின் எலும்புகளை அடக்கம் பண்ணுவதற்கு எமோரியரின் கையிலே 100 வெள்ளிக்காசுக்கு வாங்கினார்கள்.

2சாமு:24:24 – அர்வனாவிடம், ”நான் இலவசமாய் வாங்கி,என் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளை செலுத்தாமல்,அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன்” என்று சொல்லி, தாவீது அந்த களத்தையும் மாடுகளையும் 50 சேக்கல் நிறை வெள்ளிக்கு கொண்டான்.

7.   2இராஜா:6:25 – தேவனுடைய கட்டளையை மீறாமலிருக்க ஒன்று

சங்:89:34 – உடன்படிக்கையை மீறக்கூடாது

ஆதி:6:22;7:5,8; - நோவா தனக்கு கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான்.

ஆதி:21:4 – ஆபிரகாம் கட்டளையிட்டபடி விருத்தசேதனம் பண்ணினான்.

யாத்:7:6 – மோசேயும் ஆரோனும் கர்த்தர் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தார்கள்.

8.   2சாமு:18:11,12 - தாயின் வளர்ப்பு சரியாய் இருக்க ஒன்று

    யோவாப் அப்சலோமைக் குறித்து அறிவித்த தன் சேவகனிடம்,”நீ அவனை கொன்றுவிட்டு அறிவித்திருந்தாயானால்,10 வெள்ளிக்காசையும் ஒரு கச்சையையும் கொடுத்திருப்பேனே” என்றான். ஆனால் அந்த சேவகனோ,”நீர் 1000 வெள்ளிக்காசுக் கொடுத்தாலும் ராஜாவின் பிள்ளைமேல் என் கையை நீட்டமாட்டேன்” என்றான்.

      ஏனென்றால் அவன் தாய் அவனை ஜெபத்திலும் வேதவாசிப்பிலும் பரிசுத்தத்திலும் நல்மனச்சாட்சியிலும் வளர்த்திருக்கிறாள். அதனால் அவன் ராஜாவின் கட்டளையை மீறாமல் நடந்துக்கொண்டான்.

     எண்:22:18 / 24:12 – பிலேயாம் தவறான வளர்ப்பில் வளர்ந்ததினால் இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாக சாபமிட வந்தான். ஆனால் அது நடக்காததினால், அவர்களை பாவத்தில் நடத்தினால் அவர்கள் தேவனே அவர்களை அழிப்பார் என்று பாலாக்கிடம் யோசனை கூறினான்.

9.   ஓசியா:3:1-3 – கற்புநெறி தவறாதிருக்க ஒன்று

      பின்பு கர்த்தர் என்னை நோக்கி: அந்நிய தேவர்களை மதித்து, திராட்சரசமுள்ள பாத்திரங்களை விரும்புகிறவர்களான இஸ்ரவேல் புத்திரர்பேரில் கர்த்தர் வைத்திருக்கிற அன்புக்கு ஒப்பாக நீ இன்னும் போய், தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு ஸ்திரீயை நேசித்துக்கொள் என்று சொன்னார்.

“தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு ஸ்திரீ” – கர்த்தரை விட்டு விலகி சோரம் போன இஸ்ரவேல் வீட்டாரைக் குறிக்கும்.

யாத்:20:3 – “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்”.

ஓசியா: 3:3 – “அவளை நோக்கி: நீ வேசித்தனம் பண்ணாமலும், ஒருவனையும் சேராமலும் அநேகநாள் எனக்காகக் காத்திரு; உனக்காக நானும் காத்திருப்பேன் என்றேன்”.

இஸ்ரவேல் ஜனங்கள் ஒரே தெய்வமாகிய கர்த்தரைத் தொழுது கொள்கிற கட்டளை பெற்ற ஜனம். அவர்கள் அந்நிய ஜாதியாருடைய மார்க்கங்களையோ, வழிபாடுகளையோ, பழக்கவழக்கங்களையோ பின்பற்றாதிருக்க கர்த்தரோடு உடன்படிக்கை செய்து கொண்டவர்கள். அப்படிப்பட்ட இஸ்ரவேல் ஜனமானது அந்நியமார்க்கங்களை பின்பற்றி அந்நிய தேவர்களை தொழுதுகொண்டு சோரமார்க்கமாய் போனார்கள். ஆவிக்குரிய சோரம் போனார்கள். அவர்கள் மீண்டும் மெய்த்தெய்வத்தினிடம் திரும்பி வந்து அவருக்காக காத்திருக்க வேண்டும். அவரும் அவர்களுக்காக காத்திருப்பேன் என்கிறார்.

ஆவிக்குரிய சோரம் போகாமல் மணவாளன் ஒருவருக்கே கற்புநெறி தவறாது கன்னிகையாக  காத்திருக்க வேண்டும்.  

10.  லூக்:7:41 – கடன்படாதிருக்க ஒன்று

ரோமர்:13:8 – அன்பை தவிர வேறொன்றுக்கும் கடன்படாதிருக்க வேண்டும்

                   மணவாளனுக்கு நியமிக்கப்பட்ட மணவாட்டியிடம் காணப்பட வேண்டிய 10 வெள்ளிக்காசுக்கு ஒப்பான குணங்கள் இவைகளே.

    நாம் ஒன்றைக்கூட தொலைக்காமல் இருந்தால்…, மணவாளனாகிய இயேசு கிறிஸ்து மணவாட்டியாகிய நம்மைப் பார்த்து,“என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை” (உன்னதப்பாட்டு:4:7) என்று சொல்லி, அவரிடம் சேர்த்து கொள்வார்.

வேதத்தின் வெளிச்சத்தில் – விளக்கைக் கொளுத்தி – கூட்டிப் பெருக்கி - காணாமல்போன சுபாவங்களை கண்டுபிடியுங்கள். மணவாளன் இயேசு வருகையில் அது வெளியரங்கமாய் காணப்படட்டும். உன்.பாட்: 4:16 – “… என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக”.

      கறைதிரை முதலானவைகள் ஒன்றும்இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக் கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். (எபேசியர்: 5:27)

மணவாளனாகிய இயேசுகிறிஸ்து சபையாகிய மணவாட்டிக்கு ஒப்புக்கொடுத்து விட்டார். மணவாட்டியே மணவாளனாகிய இயேசுவுக்கு உன்னை ஒப்புக்கொடுத்து விட்டாயா?


குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக…

Image result for Romans:8:9
குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக…

திறவுகோல்வசனம்: ரோமர்: 8:29 “தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;”

உலகில் உள்ள மனுக்குலம் அனைத்தையும் பற்றிய நமது பிதாவாகிய தேவனுடைய ஒரே நோக்கம் இதுதான். அனைவரையும் தமது குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மாற்றுவதுதான். ஏன்? எதற்காக? “…அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு,” (எபேசியர்: 1:11).

நமக்கொரு சாயல் இருந்தது; அதை இழந்து விட்டோம். நமக்கொரு மகிமை இருந்தது; நாம் அதை இழந்து விட்டோம். ஆதியில் நமக்கிருந்த அந்த சாயல் நமக்கு மகிமையையும், புகழ்ச்சியையும் தன்னில் கொண்டிருந்தது. அது நம்மை தேவனோடு தினமும் உறவாட வைத்தது. ஒரு குறைவும் இன்றி நிறைவைத் தந்தது. கவலையோ, பயமோ, திகிலோ, வியாதியோ, மரணமோ இன்றி மகிழ்ச்சியான வாழ்வை கொடுத்து வந்தது. அது ஏதேனின் அனுபவமாயிருந்தது. ஆனால், அது நம்மில் இன்று காணப்படவில்லை. அதை மீண்டும் பெற வேண்’டும். அதைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்? அதற்கு நாம் குமாரனுடைய சாயலை பெற்றாக வேண்டும் என்று வேதம் கூறுகிறது.

அதைக்குறித்து நாம் சற்று விரிவாக தியானிப்போம்…

இப்பொழுது இருக்கும் நமது சாயல் எப்படிப்பட்டது?

ரோமர்: 8:1-8 வரை வாசிக்கும்போது இரண்டுவித சாயல் இருப்பதை உணரமுடிகிறது.

1.   பாவ மனித சாயல் – இது மனிதன் பாவம் செய்த பிறகு அடைந்த சாயல்

2.   பிசாசின் மாம்சசிந்தை மரண சாயல் – மனிதனின் சிந்தையும் மாம்ச சிந்தையும் இணைவதினால் வரும் சாயல்
உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் இவ்விரண்டு சாயலில்தான் இருக்கிறார்கள் என்பதை தேவஜனமாகிய நாம் முதலில் அறிய வேண்டும். மேற்கண்ட இரண்டு சாயலையும் உடையவர்களின் முடிவு ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறதென்று நாம் அறிவோம். இதிலிருந்து அப்படிப்பட்டவர்களை மீட்டு குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக மாற்ற வேண்டியது நமது கடமை.

பாவமனித சாயல், மாம்சசிந்தை மரண சாயல் – இவையிரண்டும் நமக்கு தருவது மரணம். மீள முடியாத இரண்டாம் மரணம். இதிலிருந்து ஒவ்வொரு மனிதனும் விடுபட வேண்டும். அதற்கு அவர்கள் அனைவரும் குமாரனுடைய சாயலைப் பெறுதல் மிக அவசியமானது.

ஆதியாகமம்: 5:1,3 – “ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார். ஆதாம் நூற்றுமுப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்”

தேவன், ஆதாமை தேவசாயலாக உண்டாக்கினார். ஆதாம், தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்றான் என்பதை கவனமாக வாசிக்க வேண்டும். ஆதாம் – தேவசாயல். ஆதாம் பெற்றதோ – பாவமனித சாயல் என்பதை நாம் கவனிக்க தவறிவிடக்கூடாது. தொடர்ந்து பிறப்பதெல்லாம் பாவமனித சாயல்தான். அதை மாற்றவே, பிதா தன் ஒரேபேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை அனுப்பினார். ஆதாம் பெற்ற பாவ மனித சாயலையும், பிசாசு தந்த மாம்ச சிந்தை மரண சாயலையும் நீக்கி மனுக்குலத்தை குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக வேண்டும் என்பதே பிதாவின் சித்தமாயிருக்கிறது.

தேவ சாயல்

ஆதியாகமம்: 1:26,27 – “பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக;” “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்;”

தேவசாயல் எப்படிப்பட்டது? ஆவியின் கனிகள் நிறைந்ததுதான் தேவசாயல்.

ஆதியில் மனிதனுடைய சாயல் தேவசாயலாக இருந்தது. அதை அவன் எப்பொழுது இழந்தான்? தேவனுக்கு கீழ்படியாமல் போனதினிமித்தம் மனிதனுக்கு பாவம் வந்தது. பாவம் வந்ததினால் தன்னிடமிருந்த தேவ சாயலை மனிதன் இழந்துபோனான். இப்பொழுது மனிதனிடம் மீதமிருப்பது பாவம் மட்டும்தான். தேவசாயல் அவனை விட்டு நீங்கிவிட்டபடியால் பாவமும் மனிதனும் சேர்ந்ததினால் மனிதன் பாவ மனித சாயலை அடைந்து விட்டான். இதற்குப் பின்பு, உலகில் பிறந்ததெல்லாம் பாவத்தின் சாயலை தரித்துக் கொண்டுதான் பிறந்தன. பிறக்கின்றன.

எனவே, தேவசாயலை இழந்த மனிதன் ஏதேனை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. தேவசாயல் மனிதன் இப்பொழுது பாவசாயல் மனிதனாகிவிட்டபடியினால் மீண்டும் ஏதேனில் நுழைய முடியாது. காரணம், ஏதேனை விட்டு வெளியேற்றப்பட்ட மனித சாயலில் இரண்டுவித கலப்படங்கள் சேர்ந்து விட்டது. 1. பாவமனித சாயல் 2. பிசாசின் மாம்ச சிந்தை மரணசாயல் கலந்து விட்டது. இந்த இரண்டு கலப்படங்களையும் மனிதனை விட்டு நீங்கும் வரை ஏதேனுக்குள்ளோ, ஏதேனின் ஆசீர்வாதங்களையோ பெற இயலாது.

ஏதேனின் ஆசீர்வாதங்கள் என்னென்ன?

இது மிகவும் முக்கியமானது. இதை நாம் இந்த இடத்தில் ஆய்வு செய்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் மனிதன் குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக மாற விருப்பப்பட மாட்டான்.

1.   ஏதேனில் தேவன் தினந்தோறும் சாயங்கால வேளையில் மனிதனிடம் உறவாட வருவார்.


2.   ஒவ்வொன்றையும் தேவனே மனிதனுக்கு கற்றுக்கொடுப்பார்.

3.   ஏதேனினல் அனைத்து ஜீவராசிகளும், விலங்கினங்களும் இருந்தாலும் மாம்சமோ, இரத்தமோ புசியாது. புல் தாவரங்களே உணவானது.

4.   கொன்று உண்ண வேண்டும் என்கிற கொலைவெறி எவற்றுக்கும் கிடையாது. எவ்வகை ஜீவராசிக்கும் மரணம் என்பது கிடையாது. எனவே, நீடித்த ஆயுள் அல்லது முடிவில்லாத ஆயுள் நியமிக்கப்பட்டிருந்தது.

5.   வியாதி, பகை, பொறாமை, வெறி கிடையாது. திருப்தியான மனநிறைவு அனைத்திற்கும் இருந்தது. எனவே, எவருக்கும் எதற்கும், எவைகளுக்கும் எதைக் கண்டும் பயமோ, திகிலோ கிடையாது. முழுமையான சந்தோசம் சமாதானம் இருந்தது.

6.   ஜீவவிருட்சம் இருந்தது. அதை புசிப்போருக்கு மரணமே கிடையாது.

இவையெல்லாம் எப்பொழுது மனிதன் இழந்தான்? பாவத்தில் விழுந்தபோது; கீழ்படியாமையின்கீழ் போனபோது; சாத்தானுக்கு செவி சாய்த்தபோது; பாவத்திற்கு இருவரும் ஒருமனப்பட்டபோது … ஏதேனின் ஆசீர்வாதங்களை மனிதன் முழுமையாக இழந்து  போனான். அதை திரும்பப் பெற மனிதனால் இயலுமா? இயலாதுதான். மனிதனால் கூடாதுதான்; தேவனால் கூடும்.

ஆம் பிரியமானவர்களே! தேவனால் எல்லாம் கூடும். அதைப் பெற்றுத்தரவே குமாரனாகிய இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார்.
கிறிஸ்துவின் சாயல்
கொலோசெயர்: 1:15 – “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்”
தேவனுடைய தற்சுரூபமும் – என்பதின் பொருள் என்ன?
திரித்துவத்தில் மூன்று அமைப்பு உண்டு என்பதை நாம் அறிவோம். மூன்று அமைப்பும் சரிசமம் என்பதையும் அறிவோம். இதில் ஏற்றத்தாழ்வு இல்லை. பிதாவின் மனிமை எப்படியோ… அப்படியே குமாரனின் மகிமையும் இருக்கும். குமாரனுடைய மகிமை எப்படியோ அப்படியே ஆவியானவரின் மகிமையும் இருக்கும். பிலிப்பியர்: 2:6 – “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,” என வேதம் கூறுவதை வாசிக்கிறோம். திரித்துவத்தில் மூன்று அமைப்பும் சரிசமம் என்பதை இதன் மூலம் நாம் அறிகிறோம்.
அதுபோல மகிமையிலும், வல்லமையிலும், தற்சுரூபத்திலும் சரிசமமே. இதில் யாதொரு மாற்றமுமில்லை. ஏற்றத்தாழ்வு இல்லை. யார் பெரியவர், உயர்ந்தவர் என்ற பாகுபாடில்லை. திரித்துவத்தில் கர்த்தராகிய இயேசு, தன்னில்தானே மகிமை உடையவர்; தன்னில் தானே வல்லமை உடையவர்; தேவனுடைய தற்சுரூபமானவர்.
பிதா, குமாரன், பரிசுத்தாவி – ஒரே சாயல், ஒரே ரூபம், = சமமானவர்கள்.
ஏன் குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக நாம் மாற வேண்டும்?
ஏனென்றால்…
1.   குமாரனாகிய இயேசுகிறிஸ்து நமது பாவங்களுக்காக சாபங்களுக்காக கல்வாரி சிலுவையில் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து மரணத்தை ஜெயித்தவர்.
2.   மனிதன் சாத்தானிடம் தொலைத்த அல்லது வஞ்சிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு இழந்துபோன தேவ சாயலை, இழந்துபோன ஆயுசுநாட்களை, இழந்துபோன தேவனோடுள்ள உறவை, இழந்துபோன நித்தியத்தை மீண்டும் பெற குமாரனுடைய சாயல் நமக்கு தேவை.
3.   குமாரனுடைய சாயலுக்கு நாம் மாறும்போது பிசாசு நம்மை அணுக முடியாது.
இழந்ததை மீண்டும் பெற குமாரனுடைய சாயல் நமக்கு தேவை. 

 சாத்தான் ஏன் மனுக்குலத்தை வெறுக்கிறான் என அறிவீர்களா?
1.   ஒரு கூட்டமக்கள் கிறிஸ்துவின் சாயலை உடையவர்களாயிருக்கிறார்கள். எனவே, சாத்தான் வெறுக்கிறான்.
2.   ஒரு கூட்டமக்கள் தேவசாயலை இழந்திருப்பினும் தேவனுடைய ரூபமாக இருக்கிறார்கள். எனவே, சாத்தான் அவர்களை வெறுக்கிறான்.
நம்மை என்ன சாயலாக மாற்ற வேண்டும் என சாத்தான் நினைக்கிறான் தெரியுமா?
1.   பாவமனித சாயல்
2.   பிசாசின் சிந்தை மரண சாயல்
இதிலிருந்து தப்பித்துக்கொள்ள … நாம் கிறிஸ்துவின் சாயலாக மாற வேண்டும்.
கிறிஸ்துவின் சாயலாக மாற நாம் முதலில் செய்ய வேண்டியது என்ன?
1.   ஞானஸ்நானம் பெற வேண்டும்:

மனிதன் இரட்சிக்கப்படாமல் இருக்கும்போது – பிசாசின் மரண சாயலிலும் பாவமனித சாயலிலும் இருக்கிறான். அப்படிப்பட்ட மனிதன் இயேசுகிறிஸ்துவை தன் சொந்த தெய்வமாக ஏற்றுக் கொண்டு, பிதா, குமாரன், பரிசுத்தாவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்று இயேசுகிறிஸ்துவின் மரணத்தோடு இணைந்து இயேசுகிறிஸ்துவின் மரணசாயலைப் பெற வேண்டும். ஞானஸ்நானத்தில் இயேசுவோடுகூட இணைக்கப்பட வேண்டும்.

ரோமர்: 6:5 – “ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்”. ரோமர்: 6:3 – “கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?” ரோமர்: 6:4 – “… அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்” 1கொரிந்தியர்: 15:49 – “மேலும், மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம்”.

2.   திருவிருந்து – நற்கருணையில் பங்குபெற வேண்டும்:

யோவான்: 6:53,54 – “அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்” ஞானஸ்நானம் பெற்றவர்கள் மாதம் தவறாமல் திருவிருந்தில் பங்கு பெற்று அவரது மரணத்தை நினைவுகூர வேண்டும். அப்பொழுது நமது ஆவி ஆத்துமா சரீரத்தில் குமாரனுடைய சாயலைப் பெறுவோம்.

3.   ஆராதனையில் பங்குபெற வேண்டும்:

2கொரிந்தியர்: 3:17,18 – “கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவியானவர் எங்கயோ அங்கே விடுதலையுமுண்டு. நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்த சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்” ஆவியானவர் ஆவிக்குரிய சபைகளில் அசைவாடிக்கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட சபைகளிலே ஆராதனையில் பங்குகொள்ளும்போது பல ஆவிக்குரிய காரியங்களை கற்றறிவது மட்டுமல்லாமல், அபிஷேகத்தையும் பெற்று ஆவிக்குரிய வாழ்வில் நாளுக்குநாள் வளர்ச்சியடைந்து குமாரனுடைய சாயலைப் பெற இயலும். கர்த்தரை ஆராதிக்கும்போதும், துதிக்கும்போதும், பாடும்போதும், அபிஷேகத்தில் நிறையும்போதும் கர்த்தரை முகமுகமாய் கண்டு, கண்ணாடியில் முகமுகமாய் காண்பதுபோன்ற உணர்வுடன் செய்யும்போது குமாரனுடைய சாயலை பெறலாம். ஆராதனையில் கவனச்சிதறல் இன்றி ஆராதிக்க வேண்டும். விட்டுவிட்டு ஆராதனைக்கு போகிற பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். தவறாது ஆராதனைக்கு கடந்து செல்லும்போது குமாரனுடைய சாயலை பெறலாம். நாம் ஆராதிக்கும்போது குமாரனுடைய சாயலைப் பெற்று மகிமையின்மேல் மகிமையடைந்து குமாரனுடைய சாயலைப்பெற்று மறுரூபமடைவோம் என்று வேதம் கூறுகிறது.

4.   வேதபாட வகுப்பில் பங்குபெற வேண்டும்:

கொலோசெயர்: 3:10 – “தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்  பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே” நம்மை சிருஷ்டித்தவருடைய பூரண அறிவடைய தனிப்பட்ட வாழ்வில் வேதத்தை வாசித்து தியானிக்க வேண்டும். அதோடு மட்டும் திருப்தியடைந்து விடக்கூடாது. சபையில் நடக்கும் வேதபாட வகுப்பில் பங்குபெற்று தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்  பூரண அறிவடையும்படி வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது குமாரனுடைய சாயலைப் பெறுவோம்.
குமாரனின் சாயல் - இழந்துபோன ஏதேனின் ஆசீர்வாதங்களை தருகிறது. எப்படி?

1.   ஆயிரவருட அரசாட்சியை தருகிறது:
ஆதியாகமம்: 2:17 – “ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம். அதை புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்”.
ஆதியாகமம்: 5:5 – “ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான்” என்று வேதம் சொல்கிறது. புசிக்கும் நாளில் ஏன் ஆதாம் சாகவில்லை? ஏனென்றால்…
2பேதுரு: 3:8 – “பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருஷம் போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள் போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்க வேண்டாம்”.
உலகில் அதிகபட்சமாக உயிரோடிருந்த ஒருவர் மெத்தூசலா மட்டுமே. ஆதியாகமம்: 5:27 – “மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்; அவன் மரித்தான்” பாவத்தினிமித்தம் மனுஷனுடைய ஆயுசுநாட்கள் எல்லாம் குறைந்துகொண்டே வந்து விட்டதை ஆதியாகமம்: 5 ஆம் அதிகாரத்தில் முழுவதும் வாசிக்கிறோம். சங்கீதம்: 90:10 – “எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாங்களும் பறந்து போகிறோம்.” என்று மோசே கூறுகிறதைப் பார்க்கிறோம்.
எனவே, உலகில் வாழும் எவரும் 1000 வருடங்கள் வாழ்ந்ததில்லை. காரணம்? பாவமனித சாயலும், பிசாசின் மாம்சசிந்தை மரணசாயலுமே நம் வாழ்விற்கு முடிவைக் கொண்டு வந்துவிட்டது. ஆதாமும் அவனது சந்ததியும் இழந்துபோனதை, இரண்டாம் ஆதாமாகிய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் பிதாவின் ஒரேபேறான குமாரனுடைய சாயல் நமக்கு மீட்டுக் கொடுத்து விட்டது. எப்படி? எப்படியென்றால்…
வெளிப்படுத்தல்: 20:4 – “அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம் பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்”.
வெளிப்படுத்தல்: 20:6 – “முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்”.
ஏதேனில் இழந்த ஆயுசின் நாட்களையும் ஆயிரவருஷத்தையும் நாம் கிறிஸ்துவுடனேகூட அரசாளப்போகிறோம்! அல்லேலூயா!
அதற்கு குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக நாம் மாற வேண்டும்.
அந்த ஆயிர வருஷம் நாம் அவரோடே ஆளுகை செய்யும்போது, சாத்தானும் அவனை சார்ந்தவர்களின் கதி என்ன?
சாத்தானின் கதி:
வெளிப்படுத்தல்: 20:2 – “பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்”
சாத்தானை சார்ந்தவர்களின் கதி:
வெளிப்படுத்தல்: 20:5 – “மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை”
பரிசுத்தவான்களின் நிலை:
வெளிப்படுத்தல்: 20:6 – ““முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்”.
2.   ஜீவ விருட்சம் தருகிறது:
 வெளிப்படுத்தல்: 22:2 – “நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைவதற்கு ஏதுவானவைகள்”
பாவம் செய்த மனிதன் மீண்டும் ஜீவவிருட்சத்தின் கனியை எந்த பாவசாயல் மனிதனும் புசித்துவிடாதபடி, சுடரொளி பட்டயத்தின் மூலம் பாதுகாக்கப்பட்டு வந்த ஜீவவிருட்சத்தின் கனிகளை, குமாரனுடைய சாயலைப் பெற்றவர்களுக்கு மீண்டும் பரத்தில் தரப்படுகிறது. ஆமென் அல்லேலூயா!
3.   ஏதேனில் வந்த ஆக்கினை – இனி இல்லை:
வெளிப்படுத்தல்: 21:3,4 – “மேலும், பரலோகத்தில் உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது”.
ஏசாயா: 65:25 – “ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதிசர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்கு செய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்”.
இப்படிப்பட்ட மகிமையான காரியங்களை குமாரனின் சாயல் நமக்கு தருகிறது. குமாரனுடைய சாயலின்றி நாம் ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தில் பங்குபெற முடியாது. தப்பித்தவறி பங்குபெற நேர்ந்தால், இரட்சிப்பின் வஸ்திரம் அதாங்க குமாரனின் சாயலின்றி காணப்படும் எவரும் அழுகையும் பற்கடிப்பும் நிறைந்த பாதாளத்திற்கு அனுப்பப்படுவார்கள் என வேதம் தெளிவாக கூறுகிறதை வாசிக்கலாம் (மத்தேயு: 22:9-13).
எனவே, இக்கடைசி நாட்களில் ஆவிக்குரிய வாழ்வில் ஏனோதானோவென்றிராமல் குமாரனுடைய சாயலுக்கொப்பாக மாற கருத்தாய் வசனங்களை கைக்கொண்டு வளருவோம். கர்த்தர் தாமே தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக நம்மை மாற்றுவாராக!ஆமென்!  


... தங்களின் வருகைக்கு நன்றி! ... மீண்டும் வருக! ... பயன்பெறுக! ... இயேசுவை பறைசாற்றுக! ...
Blogger Templates
Related Posts Plugin for WordPress, Blogger...

தொடர்பு கொள்ள

Email Address:
Name:

Form provided by Freedback.